logo
ஈரோடு கனி மார்கெட் ஜவுளி சந்தை மீண்டும் செயல்படத் தொடங்கியது:  வாரச் சந்தைக்கு அனுமதி இல்லை

ஈரோடு கனி மார்கெட் ஜவுளி சந்தை மீண்டும் செயல்படத் தொடங்கியது: வாரச் சந்தைக்கு அனுமதி இல்லை

06/Jul/2021 12:21:31

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாநகர் பன்னீர்செல்வம் பார்க் அருகே கனி மார்க்கெட் ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 350 தினசரி கடைகளும், 730 வாரச்சந்தை கடைகளும் செயல்பட்டு வந்தன. குறிப்பாக திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி சந்தை உலகப் புகழ் பெற்றது.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், குஜராத் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வார சந்தை நடைபெறும் நாளில் இங்கு வருவார்கள்.

மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு அனைத்து வகையான துணிகளும் குறைந்த விலையில் விற்கப்படுவதால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.குழந்தைகளுக்கான ரெடிமேட் சட்டை, இளைஞர்கள், பெண்கள், முதியவர்களுக்கான சட்டைகள் குறைந்த அளவில் கிடைக்கின்றன.

இங்கு சாதாரண நாட்களில் ரூ.1 கோடி வரையும், பண்டிகை காலங்களில் ரூ.5 கோடி வரையும் வர்த்தகம் நடைபெறும். ஆனால் கடந்த வருடம் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக கனி மார்க்கெட் ஜவுளி சந்தை சில மாதங்கள் மூடப்பட்டது. இதனால் இதனை நம்பி இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பின்னர் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பியதால் கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

இந்நிலையில் மீண்டும் கொரோனா 2-ஆம் அலை வேகம் எடுத்ததால் அந்த மே மாதம் 6-ஆம்  தேதி முதல் கனி மார்க்கெட் ஜவுளி சந்தை மூடப்பட்டது. இதனால் மீண்டும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தங்கள் வாழ்வாதாரத்தை காக்க பெரும்பாலான ஜவுளி வியாபாரிகள் மாற்று வேலைக்கு செல்லத் தொடங்கினார்.

 கட்டிட தொழில், செங்கல் சூளை போன்ற வேலைக்கு சென்று குடும்பத்தைக் காப்பாற்றினர். இந்நிலையில் மீண்டும் தொற்று குறையத் தொடங்கியதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று முதல் ஜவுளி சந்தை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தன்படி, திங்கள்கிழமை ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் அருகே உள்ள கனி மார்க்கெட் சந்தை செயல்படத் தொடங்கியது. முன்னதாக இந்தப் பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இன்று முதல் நாள் என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது. இன்று 230 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன. ஆனால் அதே சமயம் வாரவாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வரும் ஜவுளி சந்தைக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.

Top