logo
புதுக்கோட்டை மாவட்டத்தை  கோவிட் தொற்று இல்லாத  மாவட்டமாக  உருவாக்க நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டத்தை கோவிட் தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி

05/Jul/2021 12:32:12

புதுக்கோட்டை, ஜூன்:  புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சந்தைப்பேட்டை  புனித பாத்திமா   அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில்  மாவட்ட ஆட்சியர்  கவிதா ராமு தலைமையில்  நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாமினை  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ். ரகுபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் ரகுபதி  பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களை கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் மேற்கொண்ட போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் கோவிட் தொற்று பெருமளவில் குறைந்துள்ளது.

அந்த வகையில்  புதுக்கோட்டை மாவட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கோவிட் தொற்று குறைந்துள்ளது. மேலும் பொதுமக்களை கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில்புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

திருமயம் சந்தைப்பேட்டை புனித பாத்திமா அரசு உதவி பெரும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாம் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. திருமயம் ஊராட்சியின் மக்கள் தொகை 6,965 ஆக உள்ளது. இதுவரை 1,428 நபர்கள் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
திங்கள்கிழமை நடைபெறும் முகாமில் 1,000 நபர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இதுபோன்ற தடுப்பூசி முகாமை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 கோவிட் மூன்றாம் அலையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர்  அறிவுறுத்தியுள்ளார். இரண்டாம் அலையின் போது கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்  தங்களது உயிரை பாதுகாத்துக் கொண்டனர். கோவிட் மூன்றாம் அலை வந்தாலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கோவிட் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கோவிட் தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களில் ஆயிரக்கணக்கான பொது மக்கள்  ஆர்வமுடன் திரண்டு வந்து  தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் காலை முதல் மாலை வரை ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றனர். பிற மாநிலங்களில் பொதுமக்களுக்கு சலுகைகள் அறிவித்து தடுப்பூசி செலுத்தும் நிலை உள்ளது. ஆனால் தமிழகத்தில் பொதுமக்கள் போதிய விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.

தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதற்கு கோவிட் தடுப்பூசி அதிக அளவில் செலுத்திக்கொள்வதே இதற்கு எடுத்துக்காட்டாகும். மருத்துவத்துறை, வருவாய் துறை, காவல் துறை உள்ளிட்ட அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்களிடையே கோவிட் விழிப்புணர்வு ஏற்படுத்தி நோய் தொற்றை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலும் கோவிட் நோய் தொற்று இரட்டை இலக்க எண்ணிக்கையில் குறைக்கப்பட்டுள்ளது.எனினும் புதுக்கோட்டை  மாவட்டத்தை  கோவிட் தொற்றே இல்லாத மாவட்டமாகவும்  கோவிட் தொற்றால் இறப்பு இல்லாத நிலையை உருவாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த நிலை உருவாகும் போது தான் பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு எவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டது என்பது பொதுமக்களுக்கு தெரியும்.

மேலும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள்  ஒத்துழைப்பு அளித்து   அனைவரும் தவறாமல் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் எஸ். ரகுபதி.

இதனை தொடர்ந்து  திருமயம் வட்டம், மணவாளங்கரை கிராமத்தில் திருமயம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4.50 லட்சத்தில்  கட்டி முடிக்கப்பட்ட நீர்தேக்கத் தொட்டி மற்றும் குளியல் தொட்டியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

 இந்நிகழ்வில் பொது சுகாதாரத் துணை இயக்குநர்  பா. கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு()சிதம்பரம், ஊராட்சி மன்றத் தலைவர் சிக்கந்தர் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top