logo
ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை  நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுப்பார்: அமைச்சர் எஸ்.ரகுபதி பேச்சு

ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுப்பார்: அமைச்சர் எஸ்.ரகுபதி பேச்சு

27/Jun/2021 11:09:31

புதுக்கோட்டை, ஜூன்: ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதலமைச்சர்  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்றார் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில்  தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அரிமளம் வட்டார கிளை சார்பில் வழங்கப்பட்ட கோவிட் அவசரகால மருத்துவ உபகரணங்களை வழங்கும்  நிகழ்வுக்கு தலைமை வகித்து அமைச்சர் ரகுபதி  பேசியதாவது:

தமிழக முதல்வர்  கோவிட் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் கோவிட் தொற்று பெருமளவில் குறைந்துள்ளது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் தனியார் அமைப்புகள் சார்பிலும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில்  அரிமளம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அரிமளம் வட்டார கிளை சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் கோவிட் அவசரகால மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணியுடன் மக்கள்நல பணிகளும் மேற்கொள்கிறோம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இந்த மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு முதலமைச்சர்வ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார். ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்து அறிவிப்புகளையும் செயல்படுத்த முதல்வர்  நடவடிக்கை மேற்கொள்வார்.

கொரோனாவில் இருந்து நம்மை காக்கும் கேடயமாக  தடுப்பூசி ஒன்றுதான் செயல்பட்டு வருகிறது. எனவே அனைவரும் தடுப்பூசியை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கென மருத்துவத்துறையின் மூலம் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறதுகோவிட் தொற்றில்  இருந்து பொதுமக்களை காப்பது அரசின் தலையாய கடமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும்  என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.

இதில், பொதுசுகாதார துணை இயக்குநர் கலைவாணி, ஒன்றிய குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றிய குழுத் துணைத்தலைவர் பொன்ராமலிங்கம், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அரிமளம் வட்டாரத் தலைவர் ரெங்கநாதன், செயலாளர் ஜுலிகிறிஸ்டி, பொருளாளர் ராஜி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Top