logo
உறுப்பினர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கி  பொங்கல் விழாவைக் கொண்டாடிய ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம்

உறுப்பினர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கி பொங்கல் விழாவைக் கொண்டாடிய ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம்

14/Jan/2021 11:27:34

ஈரோடு-ஜன: ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம் சார்பில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழாவில்  பத்திரிகையாளர் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு, புத்தாடைகள் வழங்கப்பட்டன.


ஈரோடு பெரியார் மன்றத்தில் சங்க தலைவர் ஏ.எஸ்.ரமேஷ், செயலாளர் எஸ்.பி.ஜீவாதங்கவேல், பொருளாளர் ஆர். ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள்   முன்னின்று  (13.1.2021) புதன்கிழமை  நடத்திய பொங்கல் விழாவில், ஈரோடு நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜு மற்றும் ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று  சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிப் பேசுகையில்,


 ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கம்.தற்போது தை பொங்கலை குடும்பத்தோடு மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் பொங்கல் பொருட்கள் வழங்குகின்ற பெருமைக்குரிய நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்வு பிற மாவட்ட பத்திரிகையாளர் சங்கங்களுக்கு வழிகாட்டுதலாகவும்  ஊக்கமளிப்பதாகவும்  அமைந்துள்ளது. மகிழ்வித்து மகிழ் என்பதற்கு ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் சிறந்த  உதாரணம் என்று குறிப்பிட்டனர்.


மாவட்டம் முழுவதும்  நலச்சங்கத்தில் உறுப்பினராக உள்ள 160 பேருக்கு பொங்கல் தொகுப்பு  வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் வேட்டி, சட்டை, சேலை, பொங்கல் வைக்க தேவையான பொருட்கள், சில உணவு பொருட்கள் என ரூ.2,500   மதிப்பில்  25 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. ஏற்கெனவே கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் பத்திரிகையாளர் குடும்பத்திற்கு ரூ. 2ஆயிரம், ஒரு சிப்பம் அரிசி, மளிகை பொருட்கள்  ஆகியன மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் வழங்கி  அவர்களது குடும்பத்திற்கு நம்பிக்கையை அளித்தது. 


ஒவ்வொரு ஆண்டும் விழா நடத்தி பத்திரிகையாளர்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்குவது வழக்கம் அது போலவே இவ்வருடம் நடந்தது என்பது குறிப்பிடதக்கது.விழாவில், சங்க துணைத் தலைவர்கள் கே.சுப்பிரமணியம், பி.சி. மூர்த்தி, துணைச் செயலாளர்கள் ஜோசப்இன்பராஜா, இ.நவீன் மற்றும் நிர்வாகிகளுடன், ஈரோடு, பவானி, அந்தியூர், கவுந்தப்பாடி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர், பெருந்துறை, சென்னிமலை, கொடுமுடி, சிவகிரி, மொடக்குறிச்சி, அரச்சலூர்  ஆகிய பகுதிகளில்  உள்ள பத்திரிகையாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

இந்த விழா குறித்து ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்க நிர்வாகிகள்  கூறியதாவது:  தை 1  (தமிழர் திருநாள்) தைப்பொங்கல் தமிழர்களின் பாரம்பரிய விழாவாக தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு மனிதகுலத்திற்கு  பேராபத்தாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றும் அதனால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம், தொழில் உற்பத்தி பாதிப்பும்  ஓராண்டைக் கடந்த பிறகும்கூட இப்போது வரை மக்களின் அன்றாட வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

இந்த நிலையில், தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற தமிழர்களின் கூற்றுப்படி இந்த தை பொங்கல் திருவிழா மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடி இருப்பினும் தை பொங்கலுக்காக தங்கள் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப புத்தாடைகள், பொங்கல் பொருட்கள், கரும்பு என தேவையான பொருட்களை வாங்கி உற்சாகத்துடன் தை பொங்கலை மக்கள் வரவேற்கிறார்கள்.

அதே வேளையில், மாவட்டத்தில் உள்ள சில நல்ல மனிதர்களின் உதவியுடன் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நல சங்க உறுப்பினர்களின் குடும்பத்திற்கு பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கியது நெகிழ்ச்சியான தருணம் என்றனர்.

Top