logo
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும்  புதுக்கோட்டை மகளிர் சுய உதவி குழுவினர் தயாரிக்கும் வாழை நார் கூடைகள்..!

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் புதுக்கோட்டை மகளிர் சுய உதவி குழுவினர் தயாரிக்கும் வாழை நார் கூடைகள்..!

25/Jun/2021 10:57:31

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டையில்  மகளிர் சுய உதவி குழுவினர்  வாழை நாரில் தயாரிக்கும் கூடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இது குறித்து  மாநில அளவில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை பயிற்சியாளர் புதுக்கோட்டை  ரவிச்சந்திரன் கூறியதாவது: எங்களது  கிரீஸ் என்ற தொண்டு நிறுவனத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1560 மகளிர் சுய உதவி குழுக்கள் சுமார் 35,000 உறுப்பினர்கள் இருந்தனர்.

 அவர்களுக்கு குழுவை வழி நடத்துவது வழிகாட்டுவது  கடன் உதவி போன்ற உதவிகள் செய்து வந்தோம்.  ஆனால் அவர்கள் கடன் வாங்கும்போது இருக்கும் மகிழ்ச்சி  அந்தக் கடனை திருப்பி செலுத்தும் போது இருப்பதில்லை. காரணம் வாங்கிய  கடனை ஏதாவது ஒரு வகையில் செலவு செய்து விடுகின்றனர்.

எங்கள் தொண்டு நிறுவனம் சார்பில் மெழுவர்த்தி, காளான் வளர்ப்பு, கயிறு திரித்தல் போன்ற தயாரிப்பில் ஈடுபட்டு வந்தோம். ஆனால் அவற்றை  விற்பனை செய்வதற்கான  சந்தை  வாய்ப்பு குறைவாகவே இருந்ததால்  எதிர்பார்த்த வருமானம் கிடைக்கவில்லை

 இதனால் மாதம்தோறும்  இவர்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடிய வில்லை. இந்த நிலையில் மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடன் வாங்கி கொடுப்பதை விட அவர்கள் சுய தொழில் செய்து முன்னேறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என திட்டமிட்டோம் .

அதன்படி வாழை நார் மூலம் கூடை தயாரித்து அதை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான ஆர்டர் கிடைத்தது அதற்கு முதலில் பெங்களூரில் உள்ள  இண்டஸ்ட்ரி என்ற நிறுவனத்தில் 2015 -ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தோம்.


இதைத்தொடர்ந்து மகளிருக்கு தினமும் ரூ. 200 முதல் 350 வரை ஊதியம் கிடைக்கும் வகையில் அவர்கள் சொந்த ஊரிலேயே வேலையை செய்து வருமானம் பெறுவதுடன் பணி பாதுகாப்பும் சுகாதார பாதுகாப்பும் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த தொழில் செய்யும் போது சுயதொழில் என்றால் என்ன அதில் என்ன வருமானம் கிடைக்கும் என்பதை அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அறிந்து கொள்ள முடிந்தது. இதனால் சுயஉதவிக்குழு பெண்களின் கணவர்களும் இந்த தொழிலை கற்றுக்கொண்டு வேலை செய்து குடும்ப வருமானத்தை ஈட்டுகின்றனர்.  அத்துடன், இந்த குழுவினர் கடனில் சிக்கித் தவிக்காமல் சொந்தக்காலில் நிற்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் தயாரிக்கும் கூடைகள் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் உள்பட12 நாடுகளுக்கு  ஏற்றுமதி  செய்யப்படுகிறது.  நாங்கள் 8 வகையான கூடைகளை தயாரித்து வருகிறோம்.   தற்போது  27 செமீ அகலமும் 19 செமீ உயரமும் கொண்ட 7-ஆம்  எண் கூடையை   தயாரித்து வருகின்றனர் இந்த கூடைகளும் முடைவதற்கான நார்ப் பொருள்கள் திருநெல்வேலி மற்றும் சோழவந்தான் ஆகிய பகுதிகளில் வாங்கப்படுகிறது. கூடை பின்னுவதற்கு சரியாக வரக்கூடிய மட்டைகளை பயன்படுத்துகிறோம்.

பெண்களுக்கு இரண்டு மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கிறோம்.நாள் ஒன்றுக்கு ரூ.200 முதல் 500 வரை சம்பாதிக்க முடியும். எங்கள் நிறுவனம் பயிற்சி அளிப்பதுடன் கூடை முடைவதற்கான  வாழை நார்களையும் கொடுத்து  அவர்கள் தினமும் எத்தனை கூடைகள் முடைகிறார்களோ  அதை நாங்கள் எடுத்துக்கொள்வதால் சந்தைப்படுத்துவதில் பெண்களுக்கு பிரச்னையில்லை.

 டிரீஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் கூடை பின்னும் பெண்களுக்கு வாரம் ஒரு முறை ஊதியம் அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு இது போன்ற சுய தொழிலைக் கற்றுக்கொடுப்பதன் மூலம் வருமானம் பெற்று சொந்தக்காலில் நிற்கும் தன்னம்பிக்கையை  நாங்கள் வளர்த்து வருகிறேம் என்றார் ரவிச்சந்திரன்.

Top