logo
மக்கள் நலப் பணியாளர்கள் வழக்கு: விசாரணை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்

மக்கள் நலப் பணியாளர்கள் வழக்கு: விசாரணை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்

02/Oct/2020 11:14:03

மக்கள் நலப் பணியாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடு தொடர்புடைய வழக்கு விசாரணையை 3  வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்தது.

தமிழகத்தில் 2008-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது 13,500 பேர் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், 2011-இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் அனைவருக்கும் மாற்றுப் பணி வழங்கவும், பணி வழங்காவிட்டால் 6 மாத ஊதியத்தை அளிக்குமாறும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதனடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு 2014, செப்டம்பர் 23-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து, இந்த இடைக்காலத் தடையை விலக்கக் கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த ஆர்.தன்ராஜ் உள்பட  21 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த விவகாரம் கடந்த முறை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் இறுதிவாதங்கள் வைப்பதற்கு தேதி நிர்ணயிக்கப்படும் எனக்கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், அஜய் ரஸ்தோகி அமர்வில்  வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ராகேஷ் துவிவேதி, வழக்குரைஞர் வினோத் கன்னா, மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், ஆர். தன்ராஜ் தரப்பில் மூத்த வழக்குரைஞர் எஸ்.நாகமுத்து, வழக்குரைஞர் ஏ. ராஜராஜன் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.

அப்போது, இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர், எதிர்மனுதாரர்கள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அமர்வு அறிவுறுத்தியது. இதையடுத்து, வழக்கு விசாரணை  3 வாரங்களுக்குப் பிறகு பட்டியலிடப்பட்டது.

Top