logo
ஆம்னி வேனில் நூதன முறையில்  கர்நாடக மதுபாட்டில் கடத்தி வந்தவர்கள் காவல்துறையினரால் கைது

ஆம்னி வேனில் நூதன முறையில் கர்நாடக மதுபாட்டில் கடத்தி வந்தவர்கள் காவல்துறையினரால் கைது

24/Jun/2021 09:51:29

ஈரோடு, ஜூன்: கர்நாடகாவில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு ஆம்னி வேனில் நூதன முறையில் மதுபாட்டில் கடத்தி வந்தவர்களை போலீஸார் கைதுசெய்து விசாரிக்கின்றனர்.

தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட்டுள்ள 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள மாவட்டங்களில் ஒன்றான ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கர்நாடக எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடக மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பண்ணாரி சோதனை சாவடியில் வழக்கம் போல் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கர்நாடக மாநிலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக வந்த ஆம்னி வேன் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் ஆம்னி வேனில் முன்புற கதவுகள் மற்றும் பின்புற கதவுகளின் உள்ளே கர்நாடக மதுபான பாக்கெட்டுகள் பதுக்கி வைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

விசாரணையில் வேனில் வந்த நபர்கள் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் தாலுகாவை சேர்ந்த சீனிவாசன், ஜாபர், ஜலீல், கருப்புசாமி என்பதும் இவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு விற்பனைக்காக மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

 அவர்கள் 4 பேரையும் கைது செய்த சத்தியமங்கலம் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்துநீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்

Top