logo
சேலம் - சென்னை 8 வழி சாலைத் திட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீா்ப்பு ஒத்திவைப்பு

சேலம் - சென்னை 8 வழி சாலைத் திட்ட மேல்முறையீட்டு வழக்கின் தீா்ப்பு ஒத்திவைப்பு

02/Oct/2020 11:01:07

சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கலான மேல்முறையீட்டு  மனு  மீதான இறுதி விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை உச்சநீதிமன்றம்  ஒத்திவைத்து நேற்று (அக்.1) உத்தரவிட்டது

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சேலம் - சென்னை இடையே 8 வழி பசுமைச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. இவற்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்தத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது

இதை எதிர்த்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட (அமலாக்கப் பிரிவு) இயக்குநர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தது. இதனிடையே, மத்திய அரசின் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்களும், அன்புமணி ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதி .எம். கான்வில்கர் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது சுற்றுச்சூழல் அனுமதியைக் காரணம் காட்டி, சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. மேலும்இத்திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்திய பிறகு சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லையெனில், திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் என்னவாகும். இதனால், திட்டத்தைத் தொடங்குவதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறுவது அவசியமாகும் என்று விவசாயிகள் தரப்பில் வாதிடப்பட்டது

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் இறுதி விசாரணை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்தது. அப்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார்மேத்தா, திட்டத்திற்கான நிலத்தை கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை. இதனால், உயர்திமன்றத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்

இத்திட்டத்தால் விவசாயிகள் நிலமும், அவர்களது நலன்களும் பறிபோகும் சூழல் உள்ளது. சுற்றுச்சூழல் அனுமதியைப் பெறாமல் திட்டத்தை செயல்படுத்துவது தவறு. மேலும், இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கையில் உண்மை விவரங்கள் இடம் பெறவில்லை. விவசாயிகளின் நலனை பாதிக்கும் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது  என்று விவசாயிகள் தரப்பில் வாதிடப்பட்டது

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்துள்ளன. தீர்ப்பு ஒத்திவைக்கப்படுகிறது. எதிர்மனுதாரர்கள் ரிட்- மனு தாக்கல் செய்த மனுதாரர்கள் தங்களது எழுத்துப்பூர்வ வாதங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு, மனுதாரர்களான மத்திய அரசும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையகமும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என அதில்குறிப்பிடப்பட்டுள்ளது..

Top