logo
ஈரோடு மாவட்டத்தில்  முதற்கட்டமாக 150 தனியார் பேருந்துகள் இயங்க தொடங்கியது

ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 150 தனியார் பேருந்துகள் இயங்க தொடங்கியது

02/Oct/2020 12:14:35

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த மாதம் 1ம் தேதி முதல் மீண்டும் பொதுப்போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. முதலில் மாவட்டத்திற்குள் மற்றும் போக்குவரத்து நடைபெற்று வந்தது.

பின்னர் கடந்த 7-ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் 11 பணிமனைகளில் உள்ள 800 பேருந்துகளில் தற்போது 400க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததையடுத்து தனியார் பேருந்துகள் ஈரோடு மாவட்டத்தில் இயக்கப்படாமல் இருந்து வந்தது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 269 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பவானி சத்தியமங்கலம் கோபி அந்தியூர் என உள்ளூரில் மட்டும் 50 பேருந்துகளும், கோவை ,சேலம், திருப்பூர் ,கரூர் ,பழனி, மேட்டூர் உட்பட வெளி மாவட்டங்களுக்கு 219 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை  காலை முதல் ஈரோட்டிலிருந்து உள்ளூருக்கும்  மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் தனியார்  பேருந்துகள் இயங்க தொடங்கின. இதற்காக பேருந்துகளில்  கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஓட்டுநர்கள், நடத்துனர்கள் முக கவசம், கிளவுஸ் அணிந்து பணிக்கு வந்தனர்.. 60 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணிந்திருந்த பயணிகள் மட்டுமே பேருந்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். பயணிகளுக்கு  கைகளில் கிருமி நாசினி   தெளிக்கப்பட்டது.

 இதுகுறித்து ஈரோடு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பழனிசாமி கூறியது:கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனியார் பேருந்துகள்  கடந்த 7 மாதங்களாக இயக்கப்படவில்லை. தற்போது அரசின் வழிகாட்டுதலுடன் ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் முதற்கட்டமாக 150 தனியார் பேருந்துகள்  இயக்கப்படு கிறது.  வரும் நாட்களில் மீதமுள்ள அனைத்து பேருந்துகளும்  இயக்கப்படும் என்றார்.

Top