logo
முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்

முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்

16/Jun/2021 06:55:49

சென்னை, ஜூன்: முதல்வர் மு..ஸ்டாலினை  பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் புதன்கிழமை நேரில் சந்தித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்து வருகிறது. குறிப்பாக, பேரறிவாளனை மீட்டெடுக்க அவரது தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.

 அவருக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.  7 பேரும்   30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் புதன்கிழமை  தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அற்புதம்மாள், பேரறிவாளனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அவனுக்கு பரோல் தர வேண்டும் என முதல்வரிடம் மனு கொடுத்தேன். உடனடியாக முதல்வர் 30 நாட்கள் பரோல் கொடுத்தார். அதற்காக நன்றி சொல்வதற்காக தான் நான் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்தேன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 7 பேர்  விடுதலையை சீக்கிரம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தேன். கண்டிப்பாக செய்கிறேன் என முதல்வர் உறுதி அளித்தார். நீங்கள் என்ன உணர்வோடு இருக்கிறீர்களோ அதே உணர்வோடு தான் நானும் இருக்கிறேன் என்று முதல்வர்  கூறியதாகவும்  அற்புதம்மாள் தெரிவித்தார்.

Top