logo
 திருமயம் தொகுதியில் ஆலவயல், மேலத்தானியம் உள்ளிட்டபகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை : அமைச்சர் எஸ். ரகுபதி

திருமயம் தொகுதியில் ஆலவயல், மேலத்தானியம் உள்ளிட்டபகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை : அமைச்சர் எஸ். ரகுபதி

19/Jun/2021 08:35:49

புதுக்கோட்டை, ஜூன் விவசாயிகளின் கோரிக்கை ஏற்று திருமயம் தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதி தாலுகாவில் ஆலவயல், மேலத்தானியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை  எடுக்கப்படும் என்றார்  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், இளஞ்சாவூர் ஊராட்சி, மெய்யூரணி மற்றும்     அரிமளம் சத்திரம் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் நடந்த நிகழ்வுகளில்  அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை   திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக நெல் விளைச்சல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகின்றன.


அதனடிப்படையில் (18.6.2021) திருமயம் வட்டம், மெய்யூரணி மற்றும் அரிமளம் சத்திரத்தில் அரசு நேரடி நெல்கொள் முதல் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் இடைதரகர்கள் இன்றி தாங்கள் விளைவித்த நெல்லை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம். அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்த நெல்லிற்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

விவசாயிகளின் கோரிக்கைகேற்ப பொன்னமராவதி தாலுகாவுக்குள்பட்ட ஆலவயல், மேலத்தானியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்பொழுது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படவுள்ளது. எனவே விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.

இதில், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் மோகன், வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, துணை ஆட்சியர் (பயிற்சி) சுகிதா, ஒன்றியக்குழுத் தலைவர் ராமு, ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு () சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Top