logo
அக்.1. தேசிய தன்னார்வ ரத்ததான நாள்... தானம் செய்து உயிர்களைக் காப்போம்..

அக்.1. தேசிய தன்னார்வ ரத்ததான நாள்... தானம் செய்து உயிர்களைக் காப்போம்..

01/Oct/2020 10:37:42

by prof.s.viwanathan-pdk.தேசிய தன்னார்வ ரத்த தான நாள் இன்று (,அக்.1) .தன்னார்வ இரத்ததானத்தை ஊக்குவிக்கின்ற வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின் 2019-ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்  வாழ்நாளில் ஒரு முறையாவது இரத்ததானம் செய்வோம். நிகழ் ஆண்டுக்கான கருப்பொருள் தன்னார்வ ரத்ததானம் செய்து, கொரானாவிற்கு எதிரான போராட்டத்திற்கு பங்களிப்போம் என்பதே.


எனது ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே - இது மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாமல் உச்சரிக்கின்ற வரிகள். 1967-ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் எம். ஜி.ஆர். அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு ரத்ததானம் செய்வதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன் வந்தார்கள். அன்று தொடங்கி தன் வாழ்நாள் முழுவதும் தனக்கு ரத்ததானம் செய்தவர்களை மறக்காமல் என் ரத்தத்தின் இரத்தமான உடன்பிறப்புகளே என்று தொண்டர்களை அழைத்தார். புகழ்பெற்ற எழுத்தாளர் குஷ்வந்த்சிங் இந்தியன் சினிமா என்ற கட்டுரையில் குறிப்பிடுவார்; எம்.ஜி.ஆர் படம் வெளிவருகின்ற அன்று ரத்த வங்கிகளில் கூட்டம் அதிகமாக இருக்குமாம். பெரும்பாலானவர்கள் எம்.ஜி.ஆர்.ரசிகர்கள். ரத்ததானம் செய்து அதில் கிடைக்கின்ற பணத்தில் படம் பார்த்திருக்கிறார்கள்.அன்றைய காலகட்டத்தில் தன்னார்வ ரத்ததானம் என்பது அதிகம் கிடையாது. 1986 -இல் எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டு, எய்ட்ஸ் அதிகம் ரத்தம் வழியாக பரவுகிறது என்பதால், சட்டத்தின் வழி பணத்திற்கு ரத்ததானம் செய்யும் முறை தடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது தன்னார்வ ரத்ததானம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

 உலகத்திலேயே அதிகம் இரத்ததானம் செய்தவர்.  அமெரிக்காவைச் சேர்ந்த இந்த ராணுவ வீரர் ஹாவர்ட் பி.ட்ரு (Howard P.Drew). இவர்  106 லிட்டர் ரத்தம் தந்திருக்கிறார். இரண்டாவது உலகப்போரின்போது காயமடைந்த சக ராணுவ வீரருக்கு முதன் முறையாக ரத்தம் தந்தார்.

 புதுக்கோட்டையில் 100 முறைக்கு மேல் ரத்ததானம் செய்த .கண்ணன், திருச்சியில் மாப்பிள்ளை அழைப்புக்கு சற்று முன்னர் ரத்ததானம் செய்துவந்த 150 தடவைக்கு மேல் ரத்ததானம் செய்த சீனிவாச தாத்தம் போன்றவர்கள் பாராட்டுக்குரியவர்கள். புதுக்கோட்டையிலிருக்கும் மூத்த வழக்குரைஞர் திருஞானசம்பந்தம்தான் புதுக்கோட்டையின் முதல் தன்னார்வ ரத்தக்கொடையாளர்.

புதுக்கோட்டையில் தன்னார்வ ரத்ததானத்தை ஒரு இயக்கமாக மாற்றியதில் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவர்(Superintendent) ஜி.எட்வினுக்கு பெரும் பங்குண்டு. இதைத்தொடர்ந்து இயற்கை விவசாயி. கார்த்திக் மெஸ் மூர்த்தி அந்த பணியை சிறப்பாக முன்னெடுத்து நடத்திக்கொண்டிருக்கிறார்.பழனியப்பா மெஸ் .சண்முகபழனியப்பன், இந்திய ரெட்கிராஸ் சங்க புதுக்கோட்டை மாவட்ட கெளரவ செயலர் முனைவர் ஜெ. ராஜாமுகமது போன்றவர்களும் இந்தப் பணியில் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். Blood is liquid love, give it to others என்பார் எழுத்தாளர் ராமகிருஷ்ணன்.ரத்ததானம் செய்வோம் .இன்னுயிர் காப்போம்.


Top