logo
 ஈரோடு புதிய வணிக வளாகத்தில் 40 ஆண்டுகால உறுப்பினர்களுக்கு முன்னுரிமையில் கடைகள் ஒதுக்கீடு: ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை

ஈரோடு புதிய வணிக வளாகத்தில் 40 ஆண்டுகால உறுப்பினர்களுக்கு முன்னுரிமையில் கடைகள் ஒதுக்கீடு: ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை

15/Jun/2021 06:54:00

ஈரோடு, ஜூன்: ஈரோடு புதிய வணிக வளாகத்தில் 40 ஆண்டுகால உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளித்து  கடைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென ஜவுளி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு கனிமார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் நூர்முகமது, வாரச்சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்வராஜ் ஆகியோர்  வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியை நேரில்  சந்தித்து மனு அளித்தனர்.

அந்த கோரிக்கை  மனு விவரம்: தென்னிந்தியாவில் ஜவுளி ரகங்களுக்கு புகழ் பெற்று 40 ஆண்டுகளாக .கே.எம். அப்துல் கனி மார்க்கெட்(ஜவுளி சந்தை) இயங்கி வருகிறது. இங்கு 230 தினசரி ஜவுளி வியாபார கடைகள், 200-க்கும் மேற்பட்ட வாரச்சந்தை கடைகள் இயங்கி வருகின்றன.

மொத்த வியாபாரமும், சில்லறை வியாபாரமும் கலந்து நடைபெறுகிறது. இந்த சந்தையில் ஈரோடு, வீரப்பன் சத்திரம், கருங்கல்பாளையம், சிவகிரி, சென்னிமலை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமராபாளையம் பகுதியில் இருந்து சிறு, குறு ஜவுளி வியாபாரிகள் 40 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர்.

சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் ஜவுளி தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். எங்களது கடைகளுக்கு கொரோனா காலத்திலும் வாடகை பாக்கி இல்லாமல் மாநகராட்சிக்கு செலுத்தியுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., விரி விதிப்பு, பஞ்சு விலை ஏற்றம், ஜவுளி விலையேற்றம் போன்றவற்றால் ஜவுளி விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2019-2020-ஆம் ஆண்டில் கனிமார்க்கெட் வளாகத்தில் மத்திய, மாநில அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய வணிக வளாகம் கட்டும் பணி துவங்கியது. இத்திட்டத்திற்கு எங்களது சங்கத்தின் மூலம் முழு ஆதரவு கொடுத்துள் ளோம்.

தற்போது இந்த கட்டுமான பணி சில மாதத்தில் நிறைவடையும் நிலையில் உள்ளது. எனவே, இந்த வணிக வளாகத் தில் 40 ஆண்டுகாலமாக சங்கத்தின் உறுப்பினர்களாக சந்தையில் விற்பனை செய்து வரும் ஜவுளி வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளித்து முதல் தளம், இரண்டாம் தள கடைகளை வழங்க வேண்டும்.

கடந்த ஆட்சி காலத்தில் இருந்த எம்.எல்.., அமைச்சர், மாநகராட்சி ஆணையர்கள்  இதற்கு வாய்மொழியாக உறுதி அளித்துள்ளனர். இந்த உறுதிக்கேற்ப வணிக வளாகத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். அதேபோல், பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு பகுதியில் சாலையொர வியாபாரிகளுக்கும் வணிக வளாகம் சார்ந்து வியாபாரம் செய்ய கடைகளை ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Top