logo
ஊதிய உயர்வும் கிடையாது,முழுநேரவேலையும் கொடுக்க முடியாது-கோரிக்கைகளை நிராகரித்த அரசு- அதிர்ச்சியில் பகுதிநேர ஆசிரியர்கள்

ஊதிய உயர்வும் கிடையாது,முழுநேரவேலையும் கொடுக்க முடியாது-கோரிக்கைகளை நிராகரித்த அரசு- அதிர்ச்சியில் பகுதிநேர ஆசிரியர்கள்

01/Oct/2020 12:51:28

இது குறித்து, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கை

 தமிழக அரசிடமிருந்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பிற்கு 30-9-2020 அன்று  பதில் கடிதம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளான முழுநேரவேலை, ஊதியஉயர்வு மற்றும் பணிநிரந்தரம் ஆகியவற்றை வலியுறித்தி, கடந்த     5-9-2020 ஆசிரியர் தினத்தன்று முதல்வர், துணைமுதல்வர், தலைமைச்செயலாளர், பள்ளிக்கல்வி அமைச்சர், பணியாளர் மற்றும் நிர்வாகச்சீர்திருத்தத்துறை அமைச்சர், ஒருங்கிணைந்த கல்வி முதன்மைச்செயலாளர், ஆணையர் மற்றும் மாநில திட்ட இயக்குனர் ஆகியோர்களுக்கு தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது

அக்கடிதத்தில் ஏற்கனவே பணிநிரந்தரம் செய்யப்பட்டவர்களின் பல முன்உதராணங்களை சுட்டிக்காட்டி இருந்தோம்கடந்த காலங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பின்னர் காலமுறை ஊதியத்தில் நிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர்

அதைப்போலவே பகுதிநேர செயல்பட்டு வந்த தொழிற்கல்வி ஆசிரியர்கள், மணியக்காரர், கிராம முன்சீப், கர்ணம், தலையாரி, வெட்டியான் போன்ற பணியாளர்கள் அனைவரையும், காலசூழ்நிலைக்கு ஏற்றவாறு மக்கள் சேவைக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் முழுநேரவேலையுடன் பணிநிரந்தரம் செய்துவிட்டனர்

அதைப்போலவே, 2017-ஆம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் (15-06-2017, 12-07-2017)  பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது எனவும், பணிநிரந்தரம் செய்ய கமிட்டி 3 மாதத்திற்குள் அமைக்கப்படும் எனவும்மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிந் சட்டப்பேரவை அறிவிப்பை அமல்படுத்த வேண்டுகோள் வைத்து இருந்தோம்

10 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போதும் ரூபாய் 7,700 தொகுப்பூதியம் பெற்று, இதனுடன் மே மாதம் சம்பளம், போனஸ், மகப்பேறு விடுப்பு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட எந்த சலுகையும் கிடைக்காமல் குடும்பங்களை நடத்த முடியாமல் மிகுந்த சிரமப்படுகிறோம்.எனவே, தற்போதுள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பநலன் மற்றும் வாழ்வாதாரம் காத்திட அனைத்து வேலை நாட்களிலும் முழுநேர வேலையுடன் பணிவழங்குங்கள் என வேண்டுகோள் வைத்தோம்

தமிழ்நாடு மாநில மக்களின் கல்விக்காக அனைவருக்கும் கல்வி இயக்க / ஒருங்கிணைந்த கல்வித்திட்ட வேலையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதோடு, பள்ளிப்பணியில் எல்லா வகையிலும் இன்றளவும் ஈடுபடுத்தப்படுகிறோம். மேலும், வேலைநிறுத்தக் காலங்களில் அரசின் உத்தரவை ஏற்று பள்ளிகளை திறந்து நடத்தி வருகிறோம்.

எனவே, பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய மாநிலஅரசு கூடுதலாக நிதிஒதுக்கியும், மத்தியஅரசிடம் கூடுதல்நிதியை பெற்றும் எங்களை நிரந்தரம் செய்ய புதிய அரசாணை வெளியிட கேட்டுக்கொண்டோம்

கோரிக்கையை நிராகரிப்பதாக அறிவித்த அரசு: ஆனால், ஊதியஉயர்வும் கிடையாது. பணிநிரந்தரமும் செய்ய முடியாது. முழுநேரவேலையும் கொடுக்க முடியாது. திட்டம் முடியும்வரை வேலை என்றும் பகுதிநேர ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கையும் நிராகரித்து தமிழ்நாடு அரசு பேரதிர்ச்சியான பதிலை தந்துள்ளது. இது அனைவருக்கும் ஏமாற்றத்தையும்  வேதனையையும் தருகிறது

12,000 பகுதிநேர ஆசிரியகளின் எதிர்கால நலன் மற்றும் குடும்பநலன் வாழ்வாதாரம் மேம்பட தமிழ்நாடு அரசு மனிதநேயத்துடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறோம். பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

 

Top