logo
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக்  கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

11/Jun/2021 10:59:23

புதுக்கோட்டை, ஜூன்: பெட்ரோல் டீசல் விலை உயர்வைக்கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸார் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எரிபொருட்கள் விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரி  நாட்டில் உள்ள அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பாக நாடு தழுவிய போராட்டங்களை நடத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்தது.


 இதன்படி, தமிழகத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் போராட்டத்தின்போது அனைவரும் முககவசம் அணிந்து, பதாகைகளை ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்ப வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.

அதன்படி புதுக்கோட்டை பிஎல்ஏ- பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே மாவட்ட காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற  நிர்வாகிகள், வடக்கு மாவட்டதலைவர் வி,முருகேசன், வழக்குரைஞர் ஏ. சந்திரசேகரன், துரைதிவியநாதன், ஏ.எம்.எஸ். இப்ராஹிம்பாபு ஆகியோர் பேசுகையில், கடந்த 2014-இல் ரூ.410 ஆக இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.819 ஆக இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.  

கொரோனா பேரிடர் காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக ஏறி வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது. இதனால் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை முன்னெப் போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 13 மாதங்களில் பெட்ரோல் விலையில் ரூ.25.72, டீசல் விலையில் ரூ.23.93 உயர்த்தப் பட்டுள்ளது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 96.23 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் விலை ரூ.90.38 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 43 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது மக்கள் விரோதச்செயல் என்றும்  குறிப்பிட்டனர். 

இதில்,வழக்குரைஞர் என்.சி. ராதாகிருஷ்ணன், குட்லக் மீரா,மேப் வீரையா, தீன், பரூக், சரவணன் முருகானந்தம், அப்துல் காதர், பழனியப்பன், வீரமணி  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

         


Top