07/Jun/2021 03:54:01
சென்னை: நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, அக்கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. உயர் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு நீட் தேர்வு உட்பட பல நுழைவு மற்றும் திறன் அறியும் தேர்வுகள் நடத்தும் சூழலில் தமிழ்நாடு மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு பாதுகாக்கப்படுவது முன்னுரிமை பெற்றது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு
கல்வியாளர்கள், மாணவர்கள்,
பெற்றோர்கள் மற்றும் கொரோனா நோய்த்தொற்று பரவல்
தடுப்புக்கான அரசின் உயர் மட்டக்குழு என
பல்வேறு நிலைகளிலும் ஆலோசித்து, 12-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ரத்து செய்து அறிவித்துள்ளதும்,
மாணவர்களுக்கு மதிப்பெண்
வழங்கிட குழு அமைத்து பரிந்துரை கேட்டிருப்பதும்
நல்ல அணுகுமுறை ஆகும்.
இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு உள்பட உயர் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதி வலியுறுத்தியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.