logo
சென்னை ராஜீவ் காந்தி அரசு  மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்  ஆய்வு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஆய்வு

30/Sep/2020 07:17:10

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கவச உடையணிந்து அனைத்துப் பிரிவுகளிலும் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், கொரோனா தொற்று காலத்திலும் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சைகளை அளித்து வருகிறது.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், இன்று(30.9.2020) முழு கவச உடையணிந்து இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இம்மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகளுடன் தொடங்கப்பட்ட கொரோனா பராமரிப்பு மையம் தற்போது 2,000 படுக்கை வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள உதவி மையப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, ஆய்வகப் பிரிவு, ஆர்.டி.சி.பி.சிஆர் பரிசோதனை பிரிவு, ஊடுகதிர் பிரிவு, சி.டி.ஸ்கேன் பிரிவு மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்தார். அப்போது அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் உணவின் தரம், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். 

 நல்ல தரமான உணவு, சிறப்பான சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்து அரசுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்தனர். பின்னர், அங்கு முழு கவச உடையுடன் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்களை சந்தித்து அவர்களிடம் உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். அமைச்சர் உரையாடியது தங்களுக்கு மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியளிப்பதாக அமைந்தது  என மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் அமைச்சர், கவச உடை அணிந்து பணிபுரிவது என்பது எவ்வளவு கடினமான ஒரு விஷயம் என்பதை உணர்வு பூர்வமாக அறிந்துள்ளதாக பல முறை கூறியதாகவும், இன்று கவச உடையணிந்து ஆய்வு செய்யும்போதுதான் அதன் சிரமம்  என்ன என்பதைநேரில் அனுபவித்தாகவும் தெரிவித்தார். மேலும், இந்த நோய் தொற்று காலத்தில் கவச உடையணிந்து பணியாற்றும் மருத்துவக் குழுவினருக்கு தலைவணங்குவதாகவும் தெரிவித்தார்.

இதில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர்  தேரணிராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்..

  

                                                                               


Top