logo
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த டி.31 வரை அவகாசம்: உயர் நீதிமன்றம்  உத்தரவு

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த டி.31 வரை அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

30/Sep/2020 05:57:51

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான கால அவகாசத்தை வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை நிர்வகிக்கும் தனி அதிகாரியாக மாவட்டப் பதிவாளர் சேகரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நியமனத்தை எதிர்த்து தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்த நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதே போன்று ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் என்பவரும் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

ராதாகிருஷ்ணன்  தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரனை சிறப்பு அதிகாரியாக நியமித்து, கடந்த ஜூன் 30 -ஆம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது. கரோனா நோய்த் தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு காலக்கெடுவை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை உயர்நீதிமன்றம் ஏற்கனவே நீட்டித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடத்தி முடிக்கப்படாததால், தேர்தலை நடத்தி முடித்த கால அவகாசம் வழங்க கோரி ராதாகிருஷ்ணன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதி பி.டி ஆஷா முன்  விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி  தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான கால அவகாசத்தை வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிட்டார். சிறப்பு அதிகாரியான ஒய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தேர்தலை நடத்தி முடித்து அதுதொடர்பான அறிக்கையை வரும் ஜனவரி 30 -ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய  வேண்டும் என நீதிபதி பிறப்பித்த  உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். 


Top