logo
நாளை முதல் (பிப்.15)  சுங்கச்சாவடியைக் கடக்கும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம்: இல்லையெனில் 2 மடங்கு வசூல்

நாளை முதல் (பிப்.15) சுங்கச்சாவடியைக் கடக்கும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம்: இல்லையெனில் 2 மடங்கு வசூல்

14/Feb/2021 08:00:47


பாஸ்டேக் நடைமுறைக்குள் வாகன உரிமையாளர்கள் கட்டாயம் வரவேண்டும். இதற்கு மேல் காலஅவகாசம் வழங்கப்படமாட்டாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரி செலுத்த வேண்டும். கம்ப்யூட்டரில் பதிவு செய்து ரசீது கொடுக்க கூடுதல் நேரம் எடுப்பதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நேரம் விரயமானது.

இதனால் கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசு பாஸ்டேக் என்ற முறையை கொண்டு வந்தது. இந்த நடைமுறையில் சுங்கச்சாவடியில் வாகன நம்பரை ஸ்கேன் செய்து தானாகவே நமது அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளப்படும். வாகனம் நீண்ட நேரம் நிற்க வேண்டியதில்லை. 

அனைத்து வாகனங்களும் இந்த நடைமுறைக்குள் இன்னும் வரவில்லை. இந்நிலையில் நாளை நள்ளிரவில் இருந்து பாஸ்டேக் கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. ஒருவேளை பாஸ்டேக் வசதி இல்லாமலோ, செல்லுபடியாகாமலோ இருந்தால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்னதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இதற்கு மேல் காலஅவகாசம் கொடுக்கப்படமாட்டாது எனத் தெரிவித்துள்ளார்.

Top