logo
அரியர் தேர்ச்சி அறிவிப்பு யூஜிசி விதிகளுக்கு எதிரானது:  நீதிமன்றத்தில் ஏஐசிடிஇ வாதம்

அரியர் தேர்ச்சி அறிவிப்பு யூஜிசி விதிகளுக்கு எதிரானது: நீதிமன்றத்தில் ஏஐசிடிஇ வாதம்

30/Sep/2020 05:47:47

 அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்கு புறம்பானது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்  தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில், கலை அறிவியல் பொறியியல் எம்சிஏ படிப்புகளுக்கான அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன்  ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசு, பல்கலைகழக மானிய குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (..சி.டி.) பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.

அதில், தேர்வு நடத்தி மாணவர்களை மதிப்பீடு செய்யாமல், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த தமிழக அரசின் அரசாணை, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளுக்கு முரணானது. கரோனா பேரிடர் காலத்தில் இறுதியாண்டு மாணவர்கள் தவிர, பிற மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது சிக்கலானது என்பதால், அடுத்த கல்வியாண்டுக்கு மாணவர்களை முன்னேற்றி, அவர்கள் தொடர்ந்து ஆன் லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள செய்வதற்கு ஏதுவாக பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில் இறுதி பருவத் தேர்வு கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும். மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பு விதிகளுக்கு புறம்பானது

இறுதியாண்டு மாணவர்களின் அரியர் பாடங்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகள் அறிவித்துள்ளது. இந்த விதிகளை பின்பற்ற அனைத்து தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களுக்கும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகள்மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

 

 

Top