logo
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு.

ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு.

14/May/2021 03:56:40

புதுக்கோட்டை: ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சுற்றுச்சூழல், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

 ஆலங்குடி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பின்னர் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறியது:

  இம்மருத்துவமனையில் கொரோனா தொற்றாளர்கள் தங்கி சிகிச்சை பெறும் வகையில் 50 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் ,இதர பணியாளர்கள் சில தினங்களில்  நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு தேவையான   ஆழ்குழாய் கிணறு, நீர்தேக்கத் தொட்டி, மகப்பேறுக்கென தனி கட்டடம், புறநோயாளிகளுக்கான தனி கட்டடம் உள்ளிட்ட கோரிக்கைகள் மருத்துவமனையின் நி்ர்வாகத்தின் சார்பில் பெறப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், ஆலங்குடி அரசு மருத்துவமனையினை ஒரு சிறப்பு வாய்ந்த மருத்துவமனையாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

     கரோனா தொற்றில்  இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அனைவரும் தடுப்பூசி  போட்டுக்கொள்ள வேண்டும். ஆலங்குடி அரசு மருத்துவமனையில் போதுமான அளவு தடுப்பூசி இருப்பு உள்ளது. நான், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளோம். எனவே பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

 முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும், முகக்கவசங்கள், சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு, அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.

ஆய்வின்போது, ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ராமு. தலைமை மருத்துவர் மு.பெரியசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Top