logo
கோவிட்  தடுப்பு நடவடிக்கைகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னின்று பணியாற்ற வேண்டும்: அமைச்சர் ரகுபதி

கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னின்று பணியாற்ற வேண்டும்: அமைச்சர் ரகுபதி

14/May/2021 12:41:30

புதுக்கோட்டை, மே: கோவிட்  தடுப்பு நடவடிக்கைகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னின்று பணியாற்ற வேண்டும் என்றார்  தமிழக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் அமைச்சர் ரகுபதி.

 புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற  ஆய்வுக்கூட்டத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன்  ஆலோசனை மேற்கொண்டார்.

 இக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எஸ். ரகுபதி கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின்  அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருமயம் தொகுதிக்குள்பட்ட  அரிளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் காய்ச்சல் முகாம், கொரோனா பரிசோதனைகள், நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களை சிகிச்சைக்கு அனுப்புதல் மற்றும் சிகிச்சை முறைகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கோவிட் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவிட் நோயாளிகள் ஆரம்ப நிலையிலேயே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவதால் எளிதாக குணப்படுத்த முடியும். தாமதமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களை குணப்படுத்துவது மருத்துவர்களுக்கு சவாலாக உள்ளது.

எனவே பொதுமக்கள் லேசான அறிகுறிகள் தென்பட்ட உடனே அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். இதனால் தேவையற்ற உயிரிழப்பை தவிர்க்க முடியும்.

கோவிட் நோயை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் கோவிட் தொற்றை முற்றிலுமாக தவிர்க்கலாம். எனவே முகக்கவசம் அணிதல், கை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது பகுதிகளில் அதிகளவு மருத்துவ முகாம்கள் நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மருத்துவ முகாம்களில் பொதுமக்களுக்கு அதிகளவு கோவிட் தடுப்பூசி போடுவதற்கும், ஆர்டிபிசிஆர் பரிசோதனை தேவைப்படும் நபர்களை பரிசோதனை செய்யவும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்களுக்கு உதவிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுதல் மற்றும் கோவிட் பரிசோதனைகள் மூலம் பொதுமக்கள் கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

எனவே உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம்  கோவிட் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் கோவிட் தடுப்பு பணிகளில் முன்னின்று பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் ரகுபதி.

 

முன்னதாக, அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாஞ்சன்விடுதி முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் அயூப்கான் கோவிட் சிகிச்சைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1 லட்சத்திற்கான நிதியை வழங்கினார்.

 இதில், அரிமளம் ஒன்றியக்குழு தலைவர் மேகலாமுத்துஉள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Top