logo
இறவாப் புகழ் பெற்ற தமிழ் திரைப்படப் பாடல்களுக்குச் சொந்தக்காரர் கவிஞர் கு.சா.கி...

இறவாப் புகழ் பெற்ற தமிழ் திரைப்படப் பாடல்களுக்குச் சொந்தக்காரர் கவிஞர் கு.சா.கி...

14/May/2021 11:36:33

புதுக்கோட்டை, மே 13:  இறவாப்புகழ் பெற்ற தமிழ்கானங்களுக்குச் சொந்தக்காரரான  (1914-2014) நூறாண்டு கண்ட கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தியை அவரது   நினைவு நாளில்( 13.5.1990) அவர் குறித்த  அரிய பல செய்திகளை  இன்றைய இளம் தலைமுறைக் கவிஞர்களும், திரைத்துறையினரும் தெரிந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை.

ரத்தக்கண்ணீர்-  திரைப்படத்தில் குற்றம் புரிந்தவன், ராஜராஜன்- திரைப்படத்தில் நிலவோடு வான்முகில், மங்கையர்க்கரசி- திரைப்படத்தில் காதல் கனிரசமே போன்ற காலத்தால் அழியாத தமிழ்த்திரையிசைப் பாடல்கள் உள்பட 750 -க்கும் மேல்பட்ட பாடல்களை எழுதியவர் கு.சா.கி. என அன்புடன் அழைக்கப்பட்ட கு.சா. கிருஷ்ணமூர்த்தி ஆவார்.

 இவர் 19.5.1914 -ல் கும்பகோணத்தில் சாமிநாதப்பிள்ளை-மீனாட்சி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். மூன்றாம் வகுப்புடன் பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு நாடகத்தின் மீதுள்ள காதலால் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி. சுந்தராம்பாள், விஸ்வநாததாஸ், வேலுநாயர் போன்ற புகழ்பெற்ற நாடகக்கலைஞர்களுடன் சேர்ந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்குச்சென்று வந்தார்.

டி.கே.எஸ். சகோதர்களின் அவ்வையார் நாடகத்தில் கு.சா.கி. எழுதிய பெருமை கொள்வாய் தமிழா -என்ற பாடகை டி.கே. சண்முகம் உணர்ச்சிப் பொங்கப்பாடுவார். நாகர்கோவிலில் இந்த நாடகம் நடந்தபோது அதைப்பார்க்க வந்திருந்த கவிமணி தேசியவிநாயகம்பிள்ளையிடம்  அந்தப்பாடலை எழுதிய கவிஞரை அவரிடம் அறிமுகம் செய்தபோதுகு.சா.கி-யின் கைகளைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டாராம் கவிமணி.

நிரந்தர வருவாய்க்காக தனது தாய் பிறந்த ஊரான புதுக்கோட்டையில் ஒரு பதிப்பகத்தையும், படக்கடையையும் தொடங்கினார். அப்போது வயதான ஒருவருக்கு இளம் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தக் கொடுமையான நிகழ்வு கு.சா.கி-யின் குடும்பத்தில் நடந்தது. இதைப்பார்த்து மனம் புழுங்கிய கவிஞர், இந்தச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து அந்தமான் கைதி என்ற நாவலை எழுதி வெளியிட்டார்.

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பற்ற அந்த நாவலை நாடகமாக மாற்றி தனது நண்பர்களுடன் இணைந்து நடித்தார். மேலும், அந்நாளில் புகழ் பெற்ற டி.கே.எஸ். சகோதர்களாலும்  இந் நாடகம் நடத்தப்பட்டது. கு.சா.கி -க்கு மேலும் புகழைச் சேர்த்த இந்த நாடகத்தை  அண்ணா, பாவேந்தர், கல்கி, .ரா போன்றோர்  பார்த்து பாராட்டினர்.

இதைதயடுத்து தமிழ்த்திரையுலகில் பாடலாசிரியராக நுழைந்து ஆண்டாள், போஜன் போன்ற படங்களுக்கு பாடல் எழுதினார். 1952 -இல் இவரது நாவல் அந்தமான் கைதி - நாடகத்தை திரைப்படமாக எடுக்க திரைப்பட நிறுவனம் முன்வந்தது. அப்படத்துக்கு கதை திரைக்கதை வசனத்தை கு.சா.கிஎழுத, மக்கள் திலகம் எம்ஜிஆர்- முதன் முதலாக கதாநாயகனாக நடித்து அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

ஜுபிடர் அதிபர் சோமுவின் வற்புறுத்தலால் கு.சா.கி சென்னைக்குக் குடி பெயர்ந்தார். இவரது கதை வசனத்தில்  ஜுபிடர் நிறுவனம் தயாரித்த சந்திரகாந்தா என்ற படத்தில் நம்மாழ்வார் என்ற நடிகரை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால், பட அதிபரிடம் வாதாடி புதுக்கோட்டையைச் சேர்ந்த பி.யு. சின்னப்பாவை அதில் கதாநாயகனாக நடிக்க வைத்து பெரும் வெற்றிப் படமாக்கினார்.

தொடர்ந்து, நடிகவேள் எம்.ஆர். ராதா நடித்த ரத்தக்கண்ணீர் படத்தில் குற்றம் புரி்ந்தவன் வாழ்க்கையில்- என்ற பாடல் கு.சா.கி -க்கு பெரும் புகழைத் தேடித்தந்ததுஉவமைக்கவிஞர் சுரதா, கு.மா. பாலசுப்பிரமணியம், .வி.எம். ராஜன், அவிநாசிமணி ஆகியோரைத் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமையும் கவிஞர் கு.சா.கி.-க்கு உண்டு.

மங்கையர்க்கரசி- படத்துக்காக வசனம் எழுத தனக்குக் கிடைத்த வாய்ப்பை 15 வயது இளைஞரான சுரதாவுக்கு கிடைக்கச்செய்தார். அகில இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகை வகீதா ரஹ்மானை முதன்முதலில் ஒன்றே குலம் என்ற திரைப்படத்தில் நர்ஸ் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுத்தந்தவர் கு.சா.கி

1943 -ம் ஆண்டில் புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளராகப் பணியாற்றினார். அப்போதைய சமஸ்தான மன்னர் ஆட்சியிலிருந்து மக்களாட்சி ஏற்பட நடைபெற்ற போராட்டத்தில் பெரும் பங்காற்றினார்

சிலம்புச்செல்வர் மா.பொ.சி.யின் நெருங்கிய மாணவராகவும், தமிழரசுக் கழகத்தை தொடங்கியதிலி்ருந்தே அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகி, உணர்ச்சிப் பொங்கப்பேசும் நட்சத்திரப் பேச்சாளராகவும் திகழ்ந்தார். தமிழ்நாட்டின் எல்லைகளை இணைக்கும் போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்தார்.

 

தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் 1978-ம் ஆண்டில், இவர் எழுதிய பருவமழை எனும் கவிதை நூலுக்கு சிறந்த நூல்களுக்கான இரண்டாம் பரிசு கிடைத்தது. திருவருட்பிரகாச வள்ளலாரின் 101 பாடல்களை ராக- தாள- சுரக் குறிப்புடன் அருட்பா இசையமுதம் என்ற பெயரிலும், 100 பாடல்களை ராக- தாள- சுரக் குறிப்புடன் அமுதத்தமிழிசை எனும் பெயரிலும் வெளியிட்டார்.

 தமிழரசுக் கழகத்துடன் இணைந்து களம் அமைத்து தமிழ் முழக்கம் செய்த கவிஞராகவும், தமிழரசு இயக்கக் கவிஞராகவும் திகழ்ந்து, தமிழ்த்திரையுலகில் சாதனைகள் பல புரிந்த கு.சா.கி -க்கு 1966 -ம் ஆண்டில் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. இவர் எழுதிய அமுதத்தமிழிசை, அருட்பா இசையமுதம், அந்தமான் கைதி, இசையின்பம், பருவமழை, தமிழ் நாடக வரலாறு, கலைவாணன்(நாடகம்) ஆகிய நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன.

கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி 1990 -ம் ஆண்டு மே.13 -ம் நாள் தமது 76 -வது வயதில் காலமானார். நூற்றாண்டு விழா நாயகனான கு.சா.கி- யின் தங்க வரிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள  தமிழ்க் கானங்கள் காற்று உள்ளவரை, காதுகள் உள்ளவரை  தவழ்ந்து கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை.     

 

Top