logo
 சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் 58 பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் உள்பட 300 பேர் விண்ணப்பம்

சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் 58 பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகள் உள்பட 300 பேர் விண்ணப்பம்

29/Sep/2020 12:32:39

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றது. இதற்கு ஐந்து முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 30-09-2020 வரை விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை ஒன்றியத்தில் 25 சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் 33 சத்துணவு உதவியாளர்கள் என 58 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒன்றிய அலுவலகத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 300க்கும் மேற்பட்ட இரண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் 5 முதல் பத்தாம் வகுப்பு வரை தகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  இப்பணிகளுக்கு பட்டப்படிப்பு முதல் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

  படித்து முடித்துவிட்டு இதுநாள் வரை வேலை இல்லாததால் இந்த வேலையாவது நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இரண்டு பட்டப்படிப்பு, பொறியியல் பட்டம் படித்தவர்கள் சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.  வேலை இல்லா திண்டாட்டத்தில் உச்ச நிலையே இதற்குக்காரணம் என்று சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் வேதனை தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவுப் பணியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வாங்க  பட்டதாரி இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்தததால் பரபரப்பு ஏற்பட்டது.

 கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கப்படும் நிலையில், அதனை வாங்குவதற்காக பட்டதாரிகள் பெரும் திரளாக வந்து விண்ணப்பங்களை வாங்கிச்செல்கின்றனர். படித்த இளைஞர்களின் வேலையின்மையை போக்க அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Top