12/May/2021 07:31:13
ஈரோடு மே: ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் அனுமதிக்க முடியாமல் திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
நோயாளிகளுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் வழங்க இயலாத வகையில் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய நிலையில், 4,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர். மாவட்ட அளவில், அரசு, தனியார் மருத்துவமனை, கொரோனா கேர் சென்டர்களில், 3,840 படுக்கைகள் உள்ளன. இதில், ஈரோடு அரசு மருத்துவமனையில், 109, ஈரோடு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 460 பேர் மற்றும் பிற இடங்களிலும் சேர்த்து, 3,500 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர். 2,500-க்கும் மேற்பட்டோர் கொரோனா மற்றும் சில அறிகுறியுடன் வீடுகளில் தனிமையில் உள்ளனர்.
இதில், மருத்துவ கல்லுாரி மருத்துவமனை,
அரசு மருத்துவமனை, குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில்
மட்டுமே ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை வசதி உள்ளன. மற்ற இடங்களில் ஆக்சிஜன் தேவைப்படும்
நோயாளிகள் இருந்தால், அவர்களை எங்கு படுக்கை வசதி உள்ளதோ, அங்கு
மாற்றுகின்றனர்.
இதுபற்றி, தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை மற்றும் அரச்சலுார் அருகே என இரு இடங்களில், 33 டன் வரை ஆக்சிஜன் உற்பத்தியாகிறது. இதில், 30 டன் அரசு மருத்துவமனைக்கும், மீதமுள்ள, 3 டன் தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்படுகிறது. சமீபமாக ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதுடன், பல நோயாளிகள் ஆக்சிஜன் கிடைத்தால் நல்லது என்ற நிலை வரும் போது அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்குகிறோம்.
தேவையான அளவு எங்களுக்கு ஆக்சிஜன்
கிடைப்பதில்லை. 17 கிலோ
ஆக்சிஜன் சிலிண்டர், 700 முதல், 900 ரூபாய்க்கு விற்ற
நிலை மாற்றி தற்போது ரூ. 1,500 முதல்
ரூ. 1,650 ரூபாய்க்கு விற்கின்றனர். வெளிச்சந்தையில்
இதைவிட கூடுதல் விலைக்கும் ஆக்சிஜன் வாங்க
தயாராக உள்ளனர். இந்நிலையை மாற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும் என்றனர்.