logo
கொரோனா கட்டுப்பாடு...வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பாவை கூத்து கலைஞர்கள்.. அரசு உதவிக்கரம் நீட்டுமா ?

கொரோனா கட்டுப்பாடு...வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பாவை கூத்து கலைஞர்கள்.. அரசு உதவிக்கரம் நீட்டுமா ?

30/Apr/2021 12:45:09

புதுக்கோட்டை, ஏப்:தமிழகத்தின் பாரம்பரியக் கூத்துக்கலைகளில் ஒன்றான தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் கொரோனா உள்ளிட்ட  பல்வேறு இயற்கை இடர்பாடுகளால்  தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாகவும், மத்திய மாநில அரசுகள் உதவி செய்யவேண்டுமென எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

 தோல்பாவைக்கூத்து அல்லது பாவைக்கூத்து (Tholpavakoothu) என்பது உயிரற்ற பாவைகளை, உயிருள்ள பாத்திரங்களைப் போல் இயக்கி நிகழ்த்தப்படும் ஒரு கூத்து ஆகும். பதப்படுத்தப்பட்ட ஆட்டுத் தோலில் வரையப்பட்ட வண்ணப்படங்களை விளக்கின் ஒளி மூலம் திரைச்சீலையில் அதன் நிழல் தெரியுமாறு ஆட்டி நிகழ்த்துவது தோல்பாவை கூத்து.இக்கலை, தோல்பாவைக் கூத்து, தோல்பாவை நிழல் கூத்து, நிழலாட்டம், தோல் பொம்மலாட்டம் என வெவ்வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

இக்கலையானது இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகம், கேரளம், ஒரிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நிகழ்த்தப்படுகிறது. சரபோஜி மன்னர் காலத்தில் தஞ்சை அரண்மனையில் செல்வாக்குப் பெற்றிருந்த தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள், பிற்காலத்தில் பிழைப்புக்காகத் தமிழகம் முழுமைக்கும் இடம்பெயர்ந்தார்கள்.

இக்காலத்தில் தமிழகத்தில் மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்டது. இக்கலையானது இன்றைய நிலையில் நலிந்து கொண்டே வருகின்ற கலையாக மாறிவருகிறது.மராட்டியைத் தாய்மொழியாகக் கொண்ட கணிகர் சாதியின் உட்பிரிவான மண்டிகர்  சாதியைச் சார்ந்தவர்கள் தலைமுறை தலைமுறைகளாக இக்கலையை  நடத்தி வருகின்றனர்.

சேலை அல்லது துணியால் வேயப்பட்ட சிறிய அறையே, தோல்பாவைக் கூத்தின் அரங்கமாகும். இவ்வறையின் முன்பகுதியில் மெல்லிய வெள்ளைத் திரைச்சீலை கட்டப்பட்டிருக்கும். பாவைகளை இயக்கிக் கூத்தினை நடத்துபவர் இவ்வறையினுள் இருப்பார். அரங்கின் உள்பகுதியில் உள்ள வெண்திரையை ஒட்டி ஆட்டப்படும். பாவைகளின் மீது, விளக்கின் ஒளி ஊடுருவும் போது பார்வையாளர்களுக்குப் பாவைகள் தெளிவாகத் தெரியும். பார்வையாளர்கள் மண் தரையில் அமர்ந்திருப்பர்.

கூத்தரங்கின் முன்பகுதியில் இசைக்கருவிகளை இசைப்பவர்களும் பின்பாட்டுப் பாடுபவர்களும் அமர்ந்திருப்பர். பாவைக்கூத்தைக் குடும்பமாத்தான் செய்வார்கள். கூத்தை நடத்துபவர் பலகுரலில் பேசி கூத்து காட்டுபவராகவும், அவரின் குடும்ப உறுப்பினர்கள் இசைக் கருவிகளை வாசிப்பவர்களாகவும் இருப்பர். இக்கலைஞர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்து குடும்பத்தோடு கிளம்பி, பல ஊர்களில் நிகழ்ச்சி நடத்தி, மீண்டும் 6 மாதங்கள் கழித்து சொந்த கிராமத்திற்குத் திரும்புகின்றனர். ஆகவே இவர்கள் நாடோடிக் கலைஞர்களாகக் கருதப்படுகின்றனர்.

தமிழகத்தில் இரண்டாம் அலையாக பரவிவரும் கொரோனா தொற்றின்காரணமாக மேடை நாடகக் கலைஞர்கள், மெல்லிசைக் கலைஞர்கள் கடுமையா பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதில் அரிய கலைகளில் ஒன்றான தோல்பாவை கூத்து தமிழகத்தின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றாக விளங்கி வருவது தோல்பாவைக் கூத்து இந்த கலையில் இருந்துதான் திரைப்படங்கள் உருவானதாக  கூறப்படுகிறது.

 கிராமங்கள்தோறும் திருவிழாக் காலங்களிலும் பள்ளிகூடங்களில் மாணவர்களுக்கு புராண காலத்து கதைகளை குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அத்தகைய கலைஞர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குரியாகிப்போய்விட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நமணசமுத்திரம் அருகே உள்ள கடையக்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட இந்திரா நகர் காலனியில் 15-க்கும் மேற்பட்ட தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இவர்கள் பல ஆண்டு காலமாக இங்கு தங்கியிருந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமங்கள்தோறும் சென்று தோல்பாவை தெருக்கூத்து நிகழ்ச்சிகளை  நடத்தி வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அடித்த  கஜாபுயல்  மாவட்ட மக்களை மட்டுமல்லாது இவர்களுடைய  வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு விட்டது.

 

தங்களது அவல நிலை குறித்து  தோல்பாவைக்கூத்து கலைஞர்கள் கூறியது: பாவைக்கூத்துக்காக  தோல் பொருள்களில் தயாரித்து   வைத்திருந்த கலைஞர்களின் உருவங்கள் கஜா புயலில் அழிந்து போய்விட்டன.

இதிலிருந்து நாங்கள் மெல்ல மீண்டு தங்களுக்கு தேவையான கதாபாத்திரங்களை தயார் செய்து வந்த நிலையில், கடந்த ஆண்டில் தொடங்கிய கொரோனா தொற்றால்  ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையும் திருவிழாக்கள் நடத்தத் தடையும் விதிக்கப்படாததால் எங்களுடைய வாழ்க்கை 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது.

இந்தச்சூழலில் சிக்கித்தவிக்கும் தங்களுக்கு மத்திய, மாநில அரசுகள்  எந்த விதமான உதவிகளையும்  செய்யவில்லை. அரசு சலுகைகளை பெறும் வகையில் தங்களுக்கு ரேஷன் கார்டு  வழங்கப்படவில்லை. இந்த ஆண்டிலும் கொரோனா  பெருந்தொற்று இரண்டாவதுஅலை அதிகரித்துள்ளதால்  தமிழக அரசு மீண்டும் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளால் திருவிழாக்களும் தடைப்பட்டுள்ளது.

இது போன்ற கட்டுப்பாடுகளால் தங்களது தொழிலும் வாழ்க்கையும் முடங்கிப்போனதால் தங்களுக்கு ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாத  சூழ் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்வாழ்வதற்கு என்ன செய்வது என்ற திக்கு திரை  தவித்து வருவதாகவும்  வேதனையுடன்  தெரிவித்தனர்.

 மத்திய மாநில அரசுகள் பாரம்பரியக் கலையாக உள்ள தோல்பாவைக் கூத்துக் கலையை  பல தலைமுறைகளாகப் பாதுகாத்துவரும் பாவைக்கூத்து கலைஞர்களின்  வாழ்வாதாரத்தை பாதுகாக்க உதவிக்கரம் நீட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.

கொரோனா வைரஸ்  இரண்டாவது அலையின் தாக்கத்தால்  தவித்து வரும் தங்களது அவல நிலை குறித்தும் தோல்பாவைக் கூத்துக் கலை மூலமாக வெளிப்படுத்தி காட்டியது காண்போரை கலங்க செய்தது.

Top