logo
புதுக்கோட்டை  மாவட்டத்தில் முழு ஊரடங்கால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின

புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின

25/Apr/2021 05:42:24

புதுக்கோட்டை, ஏப்: முழு ஊரடங்கால் புதுக்கோட்டை  மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன.

தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இயல்பு நிலை திரும்பியதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் வேகம் எடுக்கத் தொடங்கியது.

நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. தினமும் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.கிட்டத்தட்ட தினசரி பாதிப்பு 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மே மாதம் இரண்டாவது வாரம் வரை கொரோனா தாக்கம் உச்சகட்டத்தில்  இருக்கும் என கூறப்படுகிறது.

 இதையடுத்து தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு 10 மணி முதல் அதிகாலைமணி வரை இரவு நேர ஊரடங்கையும், ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளில் முழு நேர ஊரடங்கை யும் பிறப்பித்து சனிக்கிழமை உத்தரவிட்டது. அதன்படி இரவு நேர ஊரடங்கு அமலில் வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.


புதுக்கோட்டை  மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை பேருந்து நிலையம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன


புதுக்கோட்டை  மாநகரில் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் அண்ணாசிலை, மணிக்கூண்டு, பிருந்தாவனம், பழனியப்பா கார்னர், திருக்கோகர்ணம், புதுக்குளம், சாந்தநாதர் கோயில் வீதி, கீழ இரண்டாம் வீதி  போன்ற பகுதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.


கீழராஜவீதியில்  உள்ள ஜவுளி நிறுவனங்கள் வணிக வளாகங்கள்  பெரிய மார்க்கெட், உழவர் சந்தை, இறைச்சிக் கடைகள்மீன் கடைகள்ஆகிய வை அடைக்கப்பட்டிருந்தன.

 புதுக்கோட்டை  மாவட்டத்தில்  பொன்னமராவதி, அறந்தாங்கி, ஆலங்குடி, வடகாடு, கீரனூர், இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை, கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள்  அடைக்கப்பட்டிருந்தன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 140 -க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பால் கடைகள், மருந்து கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கின.

Top