19/Apr/2021 01:05:59
புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை மாவட்டம், கலபம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வீசிய சூறைக்காற்றின் கோரத்தாண்டவம் காரணமாக அப்பகுதியில் 7 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 7,000 வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இந்த பேரிடருக்கு உரிய இழபபீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்
புதுக்கோட்டை மாவட்டம் ,கறம்பக்குடி ஒன்றியத்திற்குள்பட்ட கலபம் கிராம விவசாயிகள் 7 ஏக்கர் பரப்பளவில் 7,000 வாழைக்கன்றுகளை நடவு செய்து பாதுகாத்து வந்தனர். இந்நிலை யில் அறுவடைக்கு 10 நாட்களே இருக்கும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீசிய சூறைக் காற்றால் 7,000 வாழை மரங்களும் அடியோடு சாய்ந்து போனது. இதேபோன்று அருகே உள்ள சுற்றுவட்டார கிராமங்களிலும் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து, கலபம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், வாழை விவசாயியுமான நடராஜன் கூறியதாவது: கஜா புயல் மற்றும் கொரோனா காலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைப் பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் பெரும் இழப்பை சந்திக்க நேரிட்ட விவசாயிகளுக்கு தற்போது சூறைக்காற்றுடன்பெய்த மழையால் ரூ.35 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயிகளை மேலும் துயரத்துக்கும் இழப்புக்கும் உள்ளாக்கியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் நேரில் வந்து பாதிக்கப்பட்ட வாழைத்தோட்டங்களை பார்வை யிட்டு அதற்கான உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.