logo
ஈரோடு மாவட்டத்தில்  இதுவரை 8,104 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி:சுகாதாரத் துறையினர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 8,104 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி:சுகாதாரத் துறையினர் தகவல்

23/Feb/2021 07:25:18

ஈரோடு, பிப்: ஈரோடு மாவட்டத்தில்  இதுவரை 8,104 முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 இந்தியாவில் கொரோனாவுக்கான தடுப்பூசி முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை, பவானி, கோபி அரசு மருத்துவமனை சிறுவலூர் ஆரம்ப சுகாதார மையம் ஆகிய 5 மையங்களில் கடந்த ஜனவரி மாதம் 16 -ஆம் தேதி முதல் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பாதிப்பு எதுவும் இல்லாத காரணத்தால்  தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின்  எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.  

முதலில் அரசு, தனியார்  மருத்துவமனையில்  பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதையடுத்து இரண்டாவது கட்டமாக பிற துறைகளில் பணியாற்றும் முன் கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. வருவாய் துறையில் பணியாற்றும் ஊழியர்கள், காவல்துறை  அதிகாரிகள் ஆகியோர்களுக்கும் போடப்பட்டு வருகிறது.

 கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுதா, லோட்டஸ் ஆகிய தனியார் மருத்துவமனை களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 13-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுகுறித்து சுகாதார துறை பணியாளர்கள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்பட 5 இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி முதல் ஈரோட்டில் இரண்டு தனியார் ஆஸ்பத்திரியிலும் கொரோனா தடுப்பு ஊசி முன் கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் கடந்த மாதம்16-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை  வரை 8,104  முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு போடப்பட்டுள்ளது. இதில் திங்கள்கிழமை  மட்டும் 395 முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  முதலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அடுத்த 28 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி கட்டாயமாக போட்டுக் கொள்ள வேண்டும்.

அப்போதுதான் உடலில்  முழுமையாக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இது சம்பந்தமாக வரும் எந்த ஒரு தவறான தகவலையும் நம்ப வேண்டாம். தற்போது முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மிக விரைவில் அடுத்த கட்டமாக 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Top