logo
 இந்திய வரலாற்றை எழுத அமைத்துள்ள குழுவை  மத்திய அரசு உடனடியகாக் கலைக்க  தமுஎகச வலியுறுத்தல்

இந்திய வரலாற்றை எழுத அமைத்துள்ள குழுவை மத்திய அரசு உடனடியகாக் கலைக்க தமுஎகச வலியுறுத்தல்

28/Sep/2020 10:25:48

12,000 வருட இந்திய வரலாற்றை எழுதுவதற்கான தகுதியற்றவர்களைக் கொண்டு மத்திய அரசு அமைத்துள்ள குழுவை உடனே கலைக்க வேண்டும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாநிலத்தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் செப் 26,27 தேதிகளில் இணையவழியில் நடைபெற்ற மாநிலக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் அறிவிப்புகள், விண்ணப்பங்கள், ஒப்புகைச்சீட்டுகள் போன்றவற்றில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே பயன்படுத்தப் படுகின்றன. தமிழை, தமிழர்களை அவமதிக்கிற இந்த ஏற்கத்தகாத நிலையினால் தமிழக மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர்எனவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஆங்கிலமும் தமிழும் மட்டுமே அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

 குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தி 53 பேரை கொன்றவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத டெல்லி போலிசார், இந்த வன்முறைக்கு ஆளானவர்களையும் பல்கலைக்கழக மாணவர்களையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் பொய்வழக்கு புனைந்து  கைது செய்துவருவது கண்டிக்கத்தக்கது. மாற்றுக்கருத்தாளர்களை ஒடுக்குவதற்கு மத்திய அரசின் உள்துறை மேற்கொண்டுள்ள இந்த ஆள்தூக்கும் போக்கை கைவிடவேண்டும்.  12,000 வருட இந்திய வரலாற்றை எழுதுவதற்கான தகுதியற்றவர்களைக் கொண்டு மத்திய அரசு அமைத்துள்ள குழுவை உடனே கலைக்க வேண்டும்.

இந்தியாவின் உண்மையான வரலாற்றை முன்வைக்கும் விதமாக தமுஎகச சார்பில் இணையவழியில் தொடர் உரையரங்கம் நடத்துவது. அதில், ஆய்வுப்புலத்தில் மதிக்கத்தக்க பங்காற்றி வரும் தமிழக, இந்திய வரலாற்றாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் இந்த அமர்வுகளில் பங்கேற்க செய்வது  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், சங்கத்தின் மாநிலத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானசு.வெங்கடேசன், பொதுச்செயலர் ஆதவன் தீட்சண்யா, பேராசிரியர் அருணன், கெளரவத்தலைவர்  .தமிழ்ச்செல்வன்துணைத்தலைவர்கள் நன்மாறன், திரைக்கலைஞர் ரோஹினி, கவிஞர் நந்தலாலா, கவிஞர் நா. முத்துநிலவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Top