logo
ஈரோடு மாவட்டத்தில் தளர்வு இல்லாத ஊரடங்கு:மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்ட சாலைகள் வீதிகள்

ஈரோடு மாவட்டத்தில் தளர்வு இல்லாத ஊரடங்கு:மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்ட சாலைகள் வீதிகள்

24/May/2021 10:40:34

ஈரோடு, மே: தளர்வில்லாத  ஊரடங்கு காரணமாக  ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகளும் வீதிகளும்  காணப்பட்டன.

கொரோனா 2 -ஆவது அலை வேகம் எடுத்துள்ளதால் நாளுக்கு நாள் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் கொரோனா தாக்கம் குறைந்த பாடில்லை. இதையடுத்து கடந்த 10-ஆம் தேதி 24 -ஆம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.

எனினும் ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் அதிக அளவில் வெளியே சுற்றி வந்தனர். எனவே இதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது.இந்நிலையில் மே.24  முதல் வரும் 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.


இந்த முழு ஊரடங்கின் போது காய்கறி சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை, பலசரக்கு கடைகள் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திங்கள்கிழமை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

 ஈரோடு மாவட்டத்தில் காய்கறி சந்தைகள், உழவர் சந்தைகள், மளிகை பலசரக்கு கடைகள், ஜவுளி, டீக்கடை, எலக்ட்ரானிக் ஸ் கடைகள், இறைச்சிக் கடைகள், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தறி பட்டறைகள் உட்பட அனைத்து வகையான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.


இதேபோல் பஸ் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி அனைத்து வகையான போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போது பரபரப்பாக காய்ச்சலுக்கும் ஈரோடு பஸ் நிலையம், கடைவீதிகளான ஆர் கே வி ஈரோடு, பன்னீர் செல்வம் பார்க், மணிக்கூண்டு ,ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு பெருந்துறை ரோடு ஜி.எச். ரவுண்டானா, என மாநகர் பகுதி முழுவதும் இன்று மக்கள் நடமாட்டம்  வெறிச்சோடி காணப்பட்டது.

ஆனால்  அத்தியாவசிய பொருட்களான பால், குடிநீர் வினியோகம் வழக்கம்போல் நடந்தன. பெட்ரோல் பங்குகள், வங்கிகள் ஏடிஎம் மையங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. மருந்தகங்கள் ஆஸ்பத்திரிகள் வழக்கம் போல் செயல்பட்டன. உணவகங்களில் வாசலில் மட்டும் உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதைப்போல் அம்மா உணவகங்களும் இன்று  வழக்கம் போல் செயல்பட்டன. வேளாண் விளைபொருட்கள் மற்றும் இடு பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதைப்போல் கோபி, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, பெருந்துறை, சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கை யொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முக்கிய வீதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Top