logo
தேசிய அளவில் 9 பதக்கங்களை வென்ற ஈரோடு மாவட்ட  சிலம்ப வீரர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

தேசிய அளவில் 9 பதக்கங்களை வென்ற ஈரோடு மாவட்ட சிலம்ப வீரர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

09/Apr/2021 10:09:59

ஈரோடு. ஏப்:தேசிய அளவில் 9 பதக்கங்களை வென்ற ஈரோடு மாவட்ட  சிலம்ப வீரர்களுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயிலைச் சேர்ந்த சிலம்பாட்டக்கலைஞர் ராஜேந்திரன். இவர்  கடந்த 15 ஆண்டுகளாக அர்ஜுனா சிலம்பம் என்ற பெயரில் சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் சிலம்பத்தின் மீது ஆர்வர் கொள்ளாத மாணவர்கள் குறைந்தளவே சிலம்பம் கற்றுக்கொள்ள முன் வந்தனர்.

 ஆனால்,  ராஜேந்திரன் மனம் தளராமல் தொடர்ந்து கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு கட்டாயமாக சிலம்பப்பயிற்சி அளித்து வந்தார். நாளடைவில் மாணவ மாணவிகளும் சிலம்பத்தின் மீது  ஆர்வம் அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக  தற்போது 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிலம்பம் பயிற்சி பெற்று வருகின்றனர்.  இந்த சிலம்பப்பயிற்சி பெற்றவர்களை வெளி உலகிற்கு கொண்டு செல்ல தனது சொந்தச்செலவில் சிலம்பப்போட்டிகளில் பங்கேற்கச்செய்து  அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்தார். 


இதில் தாலுக்கா அளவில் மாவட்ட அளவில் மண்டல அளவில் வெற்றிகளை தேடித்தந்த சிலம்பல வீரர்கள் கடந்த பிப்ரவரியில் நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர். அதில் தேசிய சிலம்பப்போட்டிக்கு 9 பேர்கள் தகுதியும் பெற்றனர்.

ஆனால்,  தேசிய அளவிலான சிலம்பப்போட்டி நடைபெறும் இடம் கோவா மாநிலம் என்பதால் போட்டியில் பங்கேற்பதற்கான பயணச் செலவும் அங்கு தங்கும் வசதியையும் செய்து கொடுக்க  போதிய நிதி வசதியில்லாததினால் பயிற்சியாளர் ராஜேந்திரனும் சிலம்ப வீரர்களும் கதிகலங்கி நின்றனர். சிலம்ப மாணவ மாணவிகள் அனைவரும் விவசாய கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்பதால் அவர்களது குடும்பத்தினராலும்  கோவா மாநிலத்திற்கு அனுப்பி வைக்க நிதி கொடுக்க முடியாமல் போனது.


 இந்நிலையில் வெள்ளாங்கோயில்  கிராமப் பொதுமக்கள்  முன்வந்து  அனைவரிடமும் நிதி திரட்டினர். ஆனால், ரூ.30 ஆயிரம் வரை நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் சிலம்ப வீரர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

இது குறித்து  திரைப்பட இயக்குநரும் நடிகருமான கே.பாக்கியராஜிற்கு அவரது நண்பர் மூலம்  தகவல் தெரிய வந்தது. தான் பிறந்து வளர்ந்த ஊரான வெள்ளாங்கோயில் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலங்கி நிற்பதை அறிந்து அவரது நண்பர் மூலம் பிரபல மசாலா நிறுவனத்தின் பங்ககாக ஒரு சிறிய தொகையுடன் தனது சொந்தப்பணத்தையும் சேர்ந்து ரூ.30 ஆயிரத்தை சிலம்ப வீரர்களுக்கு வழங்கினார்.

 இதில் உற்சாகமடைந்த வீரர்கள் தேசிய அளவிலான சிலம்பம் போட்டிக்கு செல்ல கடும் பயிற்சி மேற்கொண்டு கோவா சென்றனர். இங்கு கடந்த மாதம் நடைபெற்ற 7-ஆவது தேசிய பெடரேசன் கப் யூத் ரூரல் கேம்ஸ் 2021-போட்டியில் பங்கேற்று விளையாடினர். 

அதில் தனித்திறமைப்போட்டிகளில் பிரசாந்த் மனோமகேஸ்வரன்,இளஞ்செழியன்,ஓம்ஸ்ரீ பூர்ணிசா, ஜனனி ஆகியோர் தங்கப்பதக்கமும் சுரேந்திரன், மைதிலிதேவி ஆகிய இருவரும் வெள்ளிப்பதக்கமும் ஸ்ரீநிதி வெங்கலப்பதக்கமும் வென்று சாதனை புரிந்தனர். 

தேசிய அளவில் பங்கேற்ற வெள்ளாங்கோயில் கிராமத்திலிருந்து சென்ற 9 வீரர்களும் பதக்கங்களை வென்றுள்ளது பெருமையை சேர்த்துள்ளது. பதக்கங்களை வென்று வெள்ளாங்கோயில் திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு வெள்ளாங்கோயில் கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்தும் மாலை அணிவித்து ஆரத்தி எடுத்தும் ஆரவாரமாக வரவேற்றனர். வெள்ளாங்கோயில் கிராம மக்களுக்கு சிலம்ப பயிற்சியாளர் மற்றும் சிலம்பல வீரர்கள் நன்றி தெரிவித்தனர். 

ஊர் பொதுமக்களின் பங்களிப்பை வீணாக்காத சிலம்ப வீரர்கள் நன்றி தெரிவித்ததுடன் சிலம்ப வீரர்களுக்கு விளையாட்டில் முன்னுரிமை அளிக்கவேண்டும் என்றும் அரசு சார்பில் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் இட இதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேசிய அளவில் வெற்றி பெற்று தமிழகம் திரும்பிய சிலம்ப வீரர்களை மாநில அரசும் மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Top