logo
  ஊரடங்கின் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது: கூடுதல் தலைமை செயலர் கே.பணீந்திர ரெட்டி

ஊரடங்கின் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது: கூடுதல் தலைமை செயலர் கே.பணீந்திர ரெட்டி

12/May/2021 08:48:05

புதுக்கோட்டை, மே: ஊரடங்கின் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்றார் கூடுதல் தலைமை செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திர ரெட்டி.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க கோவிட் நோய் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஊரடங்கின் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த மூன்று, நான்கு நாட்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அடுத்த  ஒரு வாரத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைவதன் மூலம் ஆக்ஸிஜன் அளவு பயன்படுத்துவதும் குறையும்.

செவ்வாய்க்கிழமை  கொரோனா பாதித்தவர்களுக்கான சிகிச்சை முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாதாரண கொரோனா தொற்று  ஏற்பட்டவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள், அவர்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் போன்றவை குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பயனாக கொரோனா பாதித்து மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதுடன், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவையும் குறையும். ஆக்ஸிஜன் தேவைகள் குறித்து தகவல்கள் அறிவதற்காக 104 எண் கொண்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, மருத்துவமனைகளில் இருந்து ஆக்ஸிஜன் தேவைகள் குறித்து வரப்பெறும் தொலைபேசி தகவல்கள் கேட்டறியப்பட்டு, அதன்மூலம் ஆக்ஸிஜன் விநியோகிப்பாளர்களை தொடர்பு கொண்டு தேவையான ஆக்ஸிஜன் விநியோகிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் அளவு குறித்து முறையாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான அளவு மட்டுமே ஆக்ஸிஜனை பயன்படுத்தவும், தேவையற்றவைகளுக்கு ஆக்ஸிஜனை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் இதற்கான குழு அமைக்கப்பட்டு ஆக்ஸிஜன் அளவு கண்காணிக்கப்பட்டு  வருகிறது.

தற்பொழுது உள்ள ஊரடங்கு காலத்தில்  மளிகை கடை, காய்கறி கடை, மருந்து கடை உள்ளிட்ட ஒருசில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளதுஇந்த கடைகளில் உள்ள அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வருகிறார்கள். இதுதவிர தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது இனிவரும் காலங்களில் காவல்துறையினர், வருவாய்துறையினர் மற்றும் பொது சுகாதாரத்துறையினர் மூலம் இவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை மாவட்ட நிh;வாகத்தின் மூலம் நியமித்து கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது . பொதுப் பணித்துறையின் மூலம் மாநிலம் முழுவதும் 12,000 எண்ணிக்கையில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அனைவரும் இந்த கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்திட அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க  வேண்டும் என்றார் அவர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்லரி முன்னிலையில் கோவிட் தடுப்பு நடவடிக் கைகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார். மேலும் புதுக்கோட்டை நகராட்சி மீன் மார்க்கெட், அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி  கொரோனா சிகிச்சை மையம் போன்றவற்றையும் ஆய்வு செய்தார்.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, பொதுசுகாதாரத் துணை இயக்குநர்கள் கலைவாணி, விஜயகுமார், நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Top