logo
புதுக்கோட்டை தொகுதி கண்ணோட்டம்  காங்கிரஸ் அதிக முறை வெற்றி பெற்ற, விவசாயத்தைத் தவிர வேறு தொழில்கள் இல்லாத புதுக்கோட்டை தொகுதி குறித்து ஓர் பார்வை.

புதுக்கோட்டை தொகுதி கண்ணோட்டம் காங்கிரஸ் அதிக முறை வெற்றி பெற்ற, விவசாயத்தைத் தவிர வேறு தொழில்கள் இல்லாத புதுக்கோட்டை தொகுதி குறித்து ஓர் பார்வை.

27/Mar/2021 05:07:41

புதுக்கோட்டை, மார்ச்:  தமிழகத்தில் பின்தங்கிய, வறட்சியான தொகுதி புதுக்கோட்டை. விவசாயத்தைத் தவிர வேறு தொழில்கள் இல்லை. ஆலங்குடி, கந்தர்வகோட்டை பகுதிகளில் சிறிதளவு முந்திரி விளைகிறது. தொழிற்சாலைகள் அதிகமில்லை. இத்தொகுதியில் தைல மரங்கள் நிறைந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள காகித தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருளாக பயன்படுகிறது. புதுக்கோட்டை தொகுதி 1962-ஆம் ஆண்டு முதல் பேரவைத் தேர்தலை சந்தித்து வருகிறது.


புதுக்கோட்டை தொகுதி: இத்தொகுதியில் முக்குலத்தோர்(கள்ளர், அகமுடையார், மறவர்) பிரிவினர் பெருமளவில் உள்ளனர். அடுத்தப்படியாக  முத்தரையர், ஆதி திராவிடர்  கணிசமாக உள்ளனர். வெள்ளாளர், யாதவர், உடையார், முஸ்லீம்கள், செட்டியார்கள், பிராமணர்கள் போன்ற முற்பட்ட சமுதாயத்தினரும் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளனர். இத்தொகுதியில் நகர்ப்புற வாக்காளர்களும், கிராமப்புற வாக்காளர்களும் ஏறத்தாழ சமநிலையிலேய உள்ளனர்.


கிராமப்புற பகுதியில்  அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு அதிகம். நகர்ப்புறத்தில் தி.மு.க. பலமுள்ள கட்சி. ஒருகாலத்தில் இத்தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது. பல்வேறு காரணங்களால் தற்போது அக்கட்சியின் செல்வாக்கில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.


ஏறத்தாழ 50 சதவீத வாக்காளர்களைக் கொண்ட புதுக்கோட்டை  நகராட்சி பகுதி:


புதுக்கோட்டை நகரில் வாரச்சந்தை நடைபெறும் நகராட்சிக்குச் சொந்தமான சுமார் 41 ஏக்கர் நிலப்பரப்பு பல்வேறு ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. அதை மீட்டு ஒருங்கிணைந்த சந்தை வளாகம் அமைத்து அங்கு தினசரி சந்தை அமைப்பது, பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்வது போன்ற சீரமைப்புப்பணிகளை மேற்கொள்ள கடந்த 2011-இல் மாவட்ட நிர்வாகத்தால் சுமார் ரூ.5 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டது. ஆனால், அது நடைமுறைக்கு வராமல் போனது.



மேலும் புதிய பேருந்து நிலையத்தின் பக்கவாட்டுப் பகுதியில் ஆம்னி பேருந்துகள் நிற்பதால் அந்த சாலை நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதை தவிர்க்க ஆம்னி பஸ்களுக்கு என்று தனிப்பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதேபோல ஷேர் ஆட்டோக்கள் வட்டப் பேருந்து இயங்குவதற்கும் கடந்த 20 ஆண்டுகளாக முட்டுக்கட்டைகள் நீடித்து வருகிறது. இதை யாருமே கண்டு கொள்ளவில்லை. புதுகை நகராட்சியில் தொடங்கப்பட்ட புதை சாக்கடைத்திட்டம் இதுவரை மக்களின் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை.


புதுகை நகராட்சியின் சாலைகளைத் தரமுடன் அமைக்க வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நிழல் தரும் மரங்களை நட வேண்டும். நகரின் சுகாதாரக்கேடுகளைக்களைய வேண்டும். கழிவு நீர்க்கால்வாய்கள் இல்லாத குடியிருப்புகளுக்கு கால்வாய் கட்டித்தர வேண்டும். அரசு சார்பில்  மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு சார்பில் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும்.


 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள தொண்டைமான் மன்னர்களின் புதிய அரண்மனையை வரலாற்று  நினைவுச்சின்னமாக மாற்றி பழமை மாறாமல் நாகர்கோவிலில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையைப் போல பாதுகாக்க வேண்டும். நகரின் முக்கிய சாலைகளின் இரு புறமும்  கட்டுப்பாடற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வெளியூர் செல்லும் சரக்கு வாகனங்களால் ஏற்படும்  போக்குவரத்து நெரிசல்களை குறைக்கும் வகையில் சுற்று வட்டப்பாதை  அமைக்க வேண்டும், திருவப்பூர், சிப்காட் ரயில்வே கிராசிங்குகளை கடக்க மேம்பாலம் அமைப்பது உள்ளிட்டவை  நகரப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகளில் சுமார் 1.20 லட்சம் வாக்காளர்கள் (50 சதவிகிதம்) உள்ளனர். புதுக்கோட்டை ஒன்றியத்தில் 26 ஊராட்சிகளும், தொகுதி சீரமைப்பின் போது ஆலங்குடி வட்டத்தைச் சேர்ந்த கறம்பக்குடி ஒன்றியத்தின் 23 ஊராட்சிகள் புதுக்கோட்டை தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன.


இந்த தொகுதியில் 1962-ஆம் ஆண்டு முதல் 2016 வரை நடந்த தேர்தல்களில் (2012 -ஆம் ஆண்டில் நடந்த இடைத்தேர்தல் உள்பட) 14 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறையும், தி.மு.க. 4 முறையும், அ.தி.மு.க. 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.


பல்வேறு தொகுதியில் கணிசமாக உள்ள முத்தரையர் சமூகத்தினருக்கு ஆளும் கட்சியால் ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக கடந்த 2016 தேர்தலில் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தனித்தொகுதி தவிர்த்த 5 தொகுதிகளிலும் சுயேச்சையாகக் களம் இறங்கியதால் 3 தொகுதிகள் (திருமயம், புதுக்கோட்டை, ஆலங்குடி) அதிமுகவுக்கு பாதகமாகவே அமைந்தது.


புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம். ஆண்கள் 1,19,273, பெண்கள் 1,24,678, மூன்றாம் பாலினத்தவர்கள் 21 என மொத்தம் 2,43,972 வாக்காளர்கள் உள்ளனர்.

புதுக்கோட்டை தொகுதியில் இதுவரை வெற்றி நிலவரம்:

1962 தியாகராஜன் (தி.மு.க.). 1967 ஆர்.விஜயரகுநாததொண்டைமான் (காங்கிரஸ்). 1971 சத்தியமூர்த்தி (காங்கிரஸ்).

1977 விஜயரகுநாத தொண்டைமான் (காங்கிரஸ்.). 1980 விஜயரகுநாத தொண்டைமான் (காங்கிரஸ்.).

1984 முகமது கனி (காங்கிரஸ்). 1989 பெரியண்ணன் (தி.மு.க.). 1991 சாமிநாதன் (காங்கிரஸ்). 1997 பெ. மாரி அய்யா (தி.மு.க.).

2001 டாக்டர் சி.விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.).2006 நெடுஞ்செழியன் (அ.தி.மு.க.). 2011 முத்துக்குமரன் (இந்திய கம்யூனிஸ்டு).

2012 கார்த்திக் தொண்டைமான் (அ.தி.மு.க.). 2016 பெரியண்ணன் அரசு (தி.மு.க.).

 தற்போது 2021-ஏப்ரல் 6-இல் நடைபெறும் சட்டமன்ற பொதுத் தேர்தலில்   அதிமுக சார்பில் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ- வீ.ஆர். கார்த்திக்தொண்டைமான் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் டாக்டர் வை. முத்துராஜா போட்டியிடுகிறார்.

இது தவிர தேமுதிக-அமமுக கூட்டணியில் சுப்பிரமணியன், மக்கள்  நீதி மய்யம் சார்பில் எஸ். மூர்த்தி,  நாம் தமிழர் கட்சி சார்பில் சசிகுமார் மற்றும் இதர கட்சிகளைச் சேர்ந்த16 பேர்  உள்பட  மொத்தம் 21 பேர் களத்தில் நிற்கின்றனர். 

 திமுகவுக்கும் அதிமுகவுக்கு இடையேதான் கடும் போட்டி                                           

   இதில், திமுகவுக்கும் அதிமுகவுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.  இவ்விரு கட்சிகளின் வேட்பாளர்களுமே முக்குலத்தோர்(கள்ளர்-அகமுடையார்) என்பதால் இருவருமே களத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் வை. முத்துரராஜா  புதுமுகம் ஆவார்.

இது தவிர புதுக்கோட்டை நகராட்சிப்பகுதியில் நன்கு அறிமுகமாக கார்த்திக் மெஸ் மூர்த்தி(மநீம), சுப்பிரமணியன்(தேமுதிக) ஆகியோரும் பிரசாரக்களத்தில் நின்று வாக்காளர்களுக்கு தங்களுக்கான இருப்பை அழுத்தமாகவே உணர்த்தி வருகின்றனர். இதுவரை மக்களின் எண்ண அலைகள் அமைதியாகவே காணப்படுகிறது. எந்தக்கட்சியின் தலைவர்கள் வந்தாலும் கூட்டம் கூடிக்களிக்கிறது. தேர்தல் நாள் நெருங்க நெருங்க உருவாகும் அதிர்வுகளால் அலை  சுனாமியாக சுழன்று அடிக்கும் போது அதில் யார் மூழ்கப் போகிறார்கள் யார் கரை சேருவார்கள் என்பது தெரிய வரும்.

Top