logo
ஆக்ஸிஜன் வசதி வழங்குவதில் தமிழகம் மிகை மாநிலமாக திகழ்கிறது: சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பெருமிதம்

ஆக்ஸிஜன் வசதி வழங்குவதில் தமிழகம் மிகை மாநிலமாக திகழ்கிறது: சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பெருமிதம்

27/Sep/2020 05:40:18

புதுக்கோட்டைதமிழகம் ஆக்ஸிஜன் உற்பத்தியில் மிகை மாநிலமாக திகழ்வதுடன் தேவைக்கு அதிகமான ஆக்ஸிஜனை அண்டை மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது என்றார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர்.              

 புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மேலூர் ஊராட்சி, அம்மன்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில், கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ-.பா.ஆறுமுகம் முன்னிலையில் (27.9.2020) இன்று நடைபெற்ற நிகழ்வில்  ரூ.45 லட்சம் கட்டப்பட்ட சமுதாய கூட கட்டடத்தை திறந்து வைத்து, மேலூரில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள சமுதாய கூட கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தில் பொது மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன் முதியோர், இணைநோய் உள்ளவர்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. களத்தில் நேரடியாக காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு கொரோனா அறிகுறி உள்ளவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில்  சிகிச்சை அளித்து குணப்படுத்தப்பட்டு வருகிறது.

 காய்ச்சல், சளி, இருமல் போன்ற ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையினை  பொது மக்களுக்கு அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வருபவா;களை நுரையீரல் பாதிப்பின்றி குணப்படுத்தவது எளிதாகும்

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கிராமப்புற மருத்துவமனைகளிலும் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் தயார் நிலையில்  வைக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கப்படவுள்ளன. இதில் பணிபுரியக் கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்களைத் தேர்வு செய்யும் பணிகள்  முடிந்தவுடன் விரைவில் மினி கிளினிக்குகள் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

தமிழகம் ஆக்ஸிஜன் உற்பத்தியில் மிகை மாநிலமாக திகழ்வதுடன் தேவைக்கு அதிகமான ஆக்ஸிஜனை அண்டை மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ளதுடன் கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது. இதே போன்று கிராமப்புறங்களில் 30 படுக்கைகள் கொண்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் 40,000 படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நாள் ஒன்றுக்கு 90,000  பேருக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இதனை கவனத்தில் கொண்ட நமது பிரதமர் மோடி கொவைட்-19 பரிசோதனையில் பிற மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்ற வேண்டுமென பாராட்டியுள்ளார் என்றார் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்இதில், அன்னவாசல் ஒன்றியக்குழுத் தலைவர் வி.ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்பி.சாம்பசிவம்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..  

Top