logo
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...  -கவிஞர் தங்கம் மூர்த்தி

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி... -கவிஞர் தங்கம் மூர்த்தி

27/Sep/2020 10:25:33

அந்தக் குழந்தைக்கு இரண்டு வயதிருக்கும், தன் தாயின் மடியில் அமர்ந்திருந்த அந்தக் குழந்தை மடியை விட்டு எழுந்தது, தாய் பிடித்து இழுத்து மடியில் அமர வைத்தாள். மீண்டும் எழுந்தது. மீண்டும் மடியில் அமர வைந்தாள். தாயை மீறி மீண்டும் எழுந்து விளையாடுவதற்கு ஓட முயன்ற குழந்தையை தாய் வலுக்கட்டாயமாக இழுத்து மடியில் அமர வைத்தார்.இப்போது தான் அந்த உச்சக் காட்சி நடந்தேறியது. மடியிலிருந்து எழுந்த குழந்தை தாயின் கன்னத்தில் ஆக்ரோஷமாக இரண்டு முறை அறைந்தது. விக்கித்துப் போனாள் தாய். அந்த அடியின் வேகம் வலியை உண்டாக்கக் கூடியது. ஒரு ஆலய வளாகத்தில் இந்த சம்பவம் என் கண்ணெதிரே நடைபெற்றுக் கொண்டிருந்தது. நான் பெரிதாக அதிர்ச்சியடையவில்லை.

இது போன்ற பல குழந்தைகளை நான் நரில் கண்டதுண்டு இரண்டே வயதில் ஒரு குழந்தை மனதில் வன்முறை குணம் வளர்ந்து வியாபித்து நிற்கிறது. குழந்தைப் பருவத்தின் குணாதிசயங்கள் எதுவும் இப்போது வளரும் குழந்தைகளிடத்தில் காண்பது அரிதிலும் அரிதாகவே உள்ளது. ஒரு குழந்தையை சுற்றிச் சூழந்திருக்கும் மென்மை மெல்ல மெல்ல மாறிப்போய் வன் உணர்வுகள் தலைதூக்கி வளர ஆரம்பிக்கிறார்கள். ஒரு பேனாவை கொடுத்துப் பார்த்தால் முன்பெல்லாம் அதை வாங்கி ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்த குழந்தைகள், இப்போது பேனா முனையை தரையில் குத்தி உடைத்து விடுகின்றனர். எந்த பொம்மையையும் இரண்டு நிமிடத்திற்கு மேல் உடைக்காமல் விட்டதில்லை. பல வீடுகளில் ரிமோட் கண்ட்ரோல்கள், செல்போன்கள் பேன்டேஜ் போட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். எல்லாம் குழந்தைகளின் லீலைகள் தான்.

வீட்டின் வரவேற்பறை தாண்டி பள்ளிக்கூடம் வந்து ஒரு வகுப்பறையில் விடப்படுகிற இந்தக் குழந்தைகளின் செய்கைகள் மேலும் பல விரும்பத்தகாத நிகழ்வுகளை உண்டாக்கிவிடுவதை அனுபவத்தில் அறியலாம். பக்கத்தில் அமர்ந்திருக்கும் குழந்தைகளை கிள்ளிவைப்பது, பென்சிலில் கூரான பகுதி கொண்டு சக மாணவர்களின் தொடை, காது, கண் என்று குத்தி விடுவது, கால்களால் எட்டி உதைப்பது, நோட்டு அல்லது புத்தகத்தின் பேப்பர்களை சுக்கு நூறாய்க் கிழித்து வைப்பது, தலையில் முட்டி விளையாடுவதாய் எண்ணி வேகமாய் முட்டி  தலையை வீங்க வைப்பது, நகங்களால் கன்னங்களில் கீறிவிடுவது, இது போன்ற பல சம்பவங்கள் குழந்தைகள் நிறைந்த ஒரு வகுப்பறையில் நடைபெறும் தினசரிக் காட்சிகள்.

இதனுடைய நீட்சிதான் ஆசிரியரை, சக மாணவனை கத்தியால் குத்துவது, சக மாணவியை கொடூரமான முறையில் கொலை செய்வது என்று தொடர்கிறது. ‘இந்தியா என் தாய் நாடு, இந்தியர் அனைவரும் என் சகோதர சகோதரிகள்என தினம் தினம் வழிபாட்டுக்கூட்டத்தில் உறுதி மொழி ஏற்கிற மாணவர்கள் அதை உதட்டளவில் தான் உச்சரிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. பாகிஸ்தானில் தீவிரவாதத் துப்பாக்கிகளால் கொன்று குவிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இங்கே மௌன அஞ்சலி செலுத்தி கண்ணீர் சிந்துகிறோம். ஆனால் பக்கத்து டெஸ்க்கில் அமர்ந்திருக்கிற சக மாணவியை காமஇச்சையோடு கண்களால் மேய்கிற அவல நிலை உருவாக என்ன காரணம்.

வன்முறையும், காமமும், குரூர எண்ணங்களும் பிஞ்சு உள்ளங்களில் வழிந்தோட மூன்று காரணங்கள் இருக்கக் கூடும். ஒன்று வீடு, இரண்டு பள்ளி, மூன்றாவது நம் சமூகம். இந்த மூன்றும் தான் மாணவர்கள் மனங்களை பக்குவப்படுத்த வேண்டும். இந்த மூன்றிலும் மண்டிக்கிடக்கும் களைகளும், பல கோளாறுகளுமே மாணவப் பறவைகள் திசை மாறிப் பறக்க காரணமாயிருக்கின்றன.

ஓடிவிளையாடு பாப்பா, கூடி விளையாடு பாப்பா என்றான் பாரதி. கூடி விளையாடுவதற்கு வீடு உகந்ததாக இல்லை. பொருளாதாரம் பெருக்குவதிலும், அதி நவீன வசதி வாய்ப்பை உருவாக்குவதிலும் காலத்தைக் கரைந்து இயந்திரமயமாகிப் போன குடும்ப சூழலில் குழந்தைகளின் புற அழகு கவனிக்கப்படுகிறதே தவிர அவர்களின் அக அழகு குறித்த அக்கறை யாருக்குமில்லை. பெரியவர்களின் பாசப் பிணைப்போ, பெற்றோர்களின் அரவணைப்போ, உடன் விளையாட குழந்தைகளோ, உறவுகளின் அறிமுகமோ ஏதுமற்ற சூழலில் குழந்தைகளுக்கு மூத்தோர் சொல் விஷமாகிப் போனது. குழந்தைகள் கையில் செல்போனைத் திணித்து, தொலைக்காட்சியின் வாயில் குழந்தைகளைத் திணித்து நம்மைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என்று நினைக்கிறார்கள் பெற்றோர்கள்.

தங்கள் குழந்தைகளின் விழிகளை உற்று நோக்கி பெற்றோர்கள் பேசுவதில்லை. ஒரு நாளைக்கு ஒரு முறை கூட தங்கள் குழந்தையை கட்டி அணைத்து ஒரு முத்தம் தருவதில்லை. குழந்தைகளின் விரும்பம் அறிவதில்லை.அவர்தம் நண்பர்கள் யாரென்று தெரிவதில்லை.அவர்களில் உலகத்தில் சில நிமிடங்கள் சஞ்சரிப்பதில்லை. மாறாக குழந்தைகள் விரும்பும் எது ஒன்றையும் வாங்கிக் கொடுத்துவிடுவதே தங்களது கடமை என பெற்றோர்கள் எண்ணுகின்றனர். அதில் உண்ணக் கூடாத உணவு, உண்ணத் தகாத சாக்லெட், எல்லாம் அடங்கும். பெரும்பாலும் பெண் பிள்ளைகளுக்கு அதி நவீன செல்போன் வாங்கிக் கொடுக்கிறார்கள். ஆண் பிள்ளைகளுக்கு புத்தம் புதிய மாடலில் பைக் வாங்கிக் கொடுக்கிறார்கள். இரண்டுமே பேராபத்தை விளைவிக்கக்கூடியவை.

அடுத்ததாக, பள்ளிக்கூடம். வகுப்பறை ஒரு மாணவனைச் செதுக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. அறிவிற் சிறந்த சான்றோனாக்குவதும், ஒரு பெரும் மனமாற்றத்தை உருவாக்குவதும் வகுப்பறை தான். சக மாணவன் மீது அன்பும், இணக்கமும், நட்பும் படரச் செய்வது மட்டுமின்றி, ஒரு குழுவாக இணைந்து பழகும் வாய்ப்பையும், வெற்றி தோல்விகளில் பக்குவத்தையும் வகுப்பறை வழங்குகிறது. ஆனால் ஒரு சில கடமை தவறிய ஆசிரியர்களால் வகுப்பறையின் முகம் மாறிப் போய்விடுகிறது. பாடப் புத்தகத்தை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வைத்து வாந்தியெடுக்க வைப்பதல்ல கல்வி. மாறாக அவனது மனக் கசடுகளை அகற்றி புது மனிதனாக, நல்லொழுக்க நெறிகளோடு அவனை உலகில் உலவ விடுவதும் கல்வியின் தலையாய நோக்கம். ஆனால் நடைமுறையில் எல்லாமே தலைகீழாய் நடக்கிறது. வகுப்பறையில் மாணவர்களிடையே கோஷ்டி தகராறு. சாதீய சிந்தனைகள், ஆசிரியர்களை எதிரிகளாக நினைக்கும் மனோபாவம், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை, எழுத்தில் எழுதக் கூசும் வார்த்தைப் பிரயோகங்கள், புத்தகப் பைகளில் துலாவிப் பார்த்தால் கிடைக்கும் ஆபத்தான ஆயுதங்கள் இப்படியாய் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பலவும் நடந்தேறும் இடமாக வகுப்பறை மாறிப் போனது.

வீடும், பள்ளிக்கூடமும் ஒருவகையில் மாணவனை திசை மாற வைக்கிறதெனில், இதில் பெரும் பங்கு வகிப்பது நம் சமூகம் தான். பத்தாம் வகுப்பு வரை நன்றாகப் படித்து வந்தான் என்னுடைய தெருவில் வசிக்கும் ஒரு மாணவன். அவனை தொழிற்கல்வி பயில அனுப்பினார்கள் பெற்றோர்கள். அவனைச் சுற்றி புது நண்பர்கள் வட்டம் கூடி விட்டது. வீட்டெதிரே எந்நேரமும் பத்து இளம் வயதினர் புதுப்புது வாகனங்களில் கூடி நின்று அரட்டை அடிப்பார்கள். பின்னர் அதே வாகனங்களில் ஏதேனும் ஒரு மைதானத்தில் ஒன்று கூடுவார்கள் இரவு மிகத் தாமதமாக அவன் வீடு திரும்பத் துவங்கினான். பைக் ஒட்டிக் கொண்டே ஒரு பீர் பாட்டிலை வாயால் உடைத்து அப்படியே குடித்துவிடுகிற ஆற்றல் அவனிடத்தில் இருப்பதாய் அவனை நண்பர்கள் புகழ்வார்கள். இப்போது அவனை நினைத்தே அந்த குடும்பம் நிம்மதியிழந்து,பரிதவிப்புடன் நிற்கிறது.

ஒரு மாணவன் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டால் அவனைக் கெடுக்க நான், நீ என்று போட்டி போட்டு ஏராளமாக விஷயங்கள் காத்திருக்கின்றன. செல்போன், இணையதளம், தொலைக்காட்சி, வக்கிரமும், காமமும் கற்பிக்கும் சினிமா, மது, சிகரெட் என கண்ணுக்கெட்டிய வரையில் அவன் மனதை களங்கப்படுத்தும் அனைத்தும் கடைவிரித்துக் காத்திருக்கின்றன.

இதிலிருந்தெல்லாம் மீண்டும் வருவதற்கு, அன்பு தவழும் குடும்பச் சூழலும், பக்குவப்படுத்தும் பள்ளிச் சூழலும், நேர்மறையான சமூகச் சூழலும் மட்டுமே சாத்தியம். பிள்ளைகளின் மனோபாவத்தை மாற்றியமைக்க மாணவப் பருவத்திலேயே முயலவில்லையெனில் ஒரு துயர் மிகுந்த சமூகத்தை எதிர்கொள்ள நேரிடும். பண்பாட்டுப் பயிற்சிகள் அதிகரிக்க வேண்டும். தோழமையோடு அவன் தோள் தொட்டு வெற்றியின் ரகசியங்கள் விளக்க வேண்டும். வள்ளுவனை, பாரதியை ஆழக்கற்கச் சொல்லி அவர்கள் வரிகளில் கிடக்கும் வாழ்க்கையை உணர வைக்க வேண்டும். சிந்தனை, செயல் அனைத்தும் நேர்மையும், ஒழுக்கமும் நிறைந்ததாய் மாற வேண்டும். ஒவ்வொருவரும் இதை அவரவர் குடும்பத்திலிருந்து தொடங்குவது வீட்டுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.

 

Top