logo
வாக்களிக்க வரும்  வாக்காளர்கள் கட்டாயம்  முகக்கவசம் அணிந்து வரவேண்டும் : தேர்தல் நடத்தும் அலுவலர்  அறிவுறுத்தல்

வாக்களிக்க வரும் வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் : தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவுறுத்தல்

19/Mar/2021 10:26:32

புதுக்கோட்டை, மார்ச்:  சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வரும்  வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம்  முகக்கவசம் அணிந்து வரவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பி. உமாமகேஸ்வரி.

 புதுக்கோட்டை அரசு ராணியார் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்த பின்னர்  அவர் மேலும் கூறியதாவது:

சட்டமன்ற தேர்தலையொட்டி  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள   6 சட்டமன்ற தொகுதி களிலும் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் மொத்தம் 1,902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள 9,128 வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் முதல்கட்ட பயிற்சி நடத்தப்படுகிறது.

இப்பயிற்சியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாளுதல், கொரோனா நோய் தடுப்பு வழிமுறைகளை கடைபிடித்தல் போன்ற பல்வேறு பணிகள்  குறித்து வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணியில் ஈடுபடும் இந்த அலுவலர்கள் அனைவருக்கும் தபால் வாக்குகள் அளிப்பதற்கான  படிவம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் புதிய அலுவலர்கள்  வாக்குப்பதிவு மையங்களில் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்தும் மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 1,700 நபர்கள் ஏற்கெனவே கொரோனா தடுப்பூசி  போட்டுக் கொண்டனர். மீதமுள்ள நபர்களுக்கும் இப்பயிற்சி வகுப்பு முடிந்தவுடன் இதன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போதுமான கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் விடுபடாமல் தடுப்பூசி  போடுவதற்கு  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கொரோனா நோய் தொற்று  புக்கோட்டை மாவட்டத்தில் கட்டுக்குள் உள்ளது. கொரோனா நோய் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும். தேர்தலில் வாக்களிக்க வரும் அனைத்து பொது மக்களும் தவறாமல்  கட்டாயம் முகக்கவசம் அணிந்தே வாக்களிக்க வரவேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது  என்றார் பி. உமாமகேஸ்வரி.

முன்னதாக ,கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட புதுப்பட்டி, அரசு தொழில் நுட்பக் கல்லுரியில்  நடந்த பயிற்சி வகுப்பினையும் மாவட்ட ஆட்சியர் மற்றும்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வட்டாட்சியர் முருகப்பன் உள்ளிட்டோர்  உடன் சென்றனர்.

Top