logo
 கண்மாய்- கிணறுகளின் நீர் இருப்பை பொருத்து  கோடை சாகுபடி மேற்கொள்ளலாம்: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவிப்பு

கண்மாய்- கிணறுகளின் நீர் இருப்பை பொருத்து கோடை சாகுபடி மேற்கொள்ளலாம்: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அறிவிப்பு

17/Mar/2021 05:55:43

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கண்மாய் மற்றும் கிணறுகளின் நீர் இருப்பைப் பொருத்து விவசாயிகள் கோடை சாகுபடியை மேற்கொள்ளலாம்

இது குறித்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்:  புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் இயல்பாக கிடைக்க  வேண்டிய 11.67 மில்லி மீட்டர் மழையளவைவிட  208.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 

இந்த தொடர் மழையால்  மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களில் உள்ள கண்மாய்களின் நீர் இருப்பு மற்றும் கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.  தற்போதுள்ள நீர் இருப்பினை பயன்படுத்தி நெல், கேழ்வரகு, கம்பு, உளுந்து மற்றும் நிலக்கடலை ஆகிய பயிர்களை விவசாயிகள்  சாகுபடி செய்யலாம்.

கோடையில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்து சாகுபடி செய்தால், 40 சதவீத அளவு நீரை சேமிக்க முடியும். மேலும் நெல் சாகுபடி செய்துள்ள வயல்களின் வரப்புகளில் பயறு வகைகளை விதைத்தால் பூச்சி நோய் தாக்குதலை  குறைக்க முடிவதுடன்  கூடுதல் வருமானமும் கிடைக்கும். 

வரப்பில் உள்ள பயறு வகை பயிர்களில் உள்ள சாறு உறிஞ்சும்  பூச்சியை உண்பதற்காக வரும்  பொறி வண்டு மற்றும் ஊசி தட்டான் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் நெல் பயிரை தாக்கக்கூடிய குருத்து பூச்சி , இலை சுருட்டு புழு மற்றும் புகையான் பூச்சிகளையும் உண்பதால்; நெல் பயிருக்கு  பூச்சிக்கொல்லி  மருந்து தெளிக்கும் செலவினம் குறையும்.

தற்பொழுது  அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும்  சாகுபடிக்கு தேவையான சான்று பெற்ற கோடை பருவத்திற்கு ஏற்ற ரகங்களான ஏடிடீ37, ஏடிடீ 45, கோ-51 மற்றும்  ஏ.எஸ்.டி16 நெல் விதைகள் 107.307 மெட்ரிக் டன்இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

நெல் தவிர சிறுதானியங்கள் 7.5 மெட்ரிக் டன்னும், பயறு வகை விதைகள் 2.2 மெட்ரிக் டன், நிலக்கடலை விதைகள் 6.5 மெ.டன்னும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.   சாகுபடிக்கு தேவையான யூரியா 3,636 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 926 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2,074 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 3,502 மெட்ரிக் டன் ஆகியவை தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

  அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் மொத்தம் 25.5 மெட்ரிக் டன்கள் நுண்ணூட்ட உரங்களும் இருப்பில் உள்ளன. சான்று பெற்ற உயர் விளைச்சல் ரக விதைகளைகோடை  சாகுபடிக்கு  பயன்படுத்தி  அதிக மகசூல் பெறலாம்.


Top