logo
கொரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கும் நிலை வரும்: ஈரோடு ஆட்சியர்

கொரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கும் நிலை வரும்: ஈரோடு ஆட்சியர்

13/Mar/2021 04:23:08

ஈரோடு, மார்ச்: கொரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கும் நிலை உருவாகும் என  ஈரோடு  மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது.வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கொரோனா பரவலைத்தடுக்க  பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு  முன்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  முக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் கடந்த நான்கு நாட்களாக முக கவசம் அணியாமல் வருபவர்களிடம் ரூ .200 அபராதம் வசூலிக்கப்படுகிறது.

 இந்த நிலையில்  வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரும்  தேர்தல் நடத்தும் அலுவலருமான சி. கதிரவன் ஈரோடு  வ.உ.சி பூங்கா காய்கறி மார்க்கெட் ,வணிக வளாகங்கள், மேட்டூர் சாலையிலுள்ள  கடைகள்  பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டு முக கவசம் அணியாமல் வந்த 50 நபர்களுக்கு ரூ 200 அபராதம் விதித்தார். இதைப்போல் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றாத 5 கடைகளுக்கு தலா ரூ 25 ஆயிரம் விதித்தார். மேலும் இரண்டு கடைகளுக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து இரண்டாவது  நாளாக  ஆட்சியர் சி. கதிரவன் ரவுண்டானா இடையன்காட்டுவலசு போன்ற பகுதிகளில் சனிக்கிழமை அதிரடி ஆய்வு மேற்கொண்டார். இதில் முக கவசம் அணியாமல் வந்த 10-க்கும் மேற்பட்டோருக்கு ரூ 200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஒரு செல்போன் கடை , ஒரு ஹோட்டல் உள்பட 5 கடைகளுக்கு தலா 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. இதில்  3 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. 

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா தினசரி பாதிப்பு 20 - ஐ நெருங்கியுள்ளது. எனவே தொழிற்சாலை, நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும் .மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் தொழிற்சாலை நிறுவனங்களில்  கிருமி நாசினி பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டும். இல்லை என்றால் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என  அவர் எச்சரித்தார்.

Top