logo
வேட்பாளர்களை மாற்ற கோரி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம்:

வேட்பாளர்களை மாற்ற கோரி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம்:

12/Mar/2021 10:38:21

சென்னை: அதிமுக வேட்பாளர்களை மாற்ற கோரியும், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பூந்தமல்லி, செய்யூர், கும்மிடிபூண்டி உள்பட தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுகவினர் நேற்று சாலை மறியல்,தீ குளிப்பு, ஆர்பாட்டம் போன்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தையும் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடக்கிறது. இதற்காக தி.மு.க., அதிமுக, ம.நீ.ம., அமமுக உள்பட பல கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. முன்னதாக திமுக தலைவர் ‘விடியலை நோக்கி ஸ்டாலின், மக்கள் கிராம சபை என்ற பெயர்களில் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே தேர்தல் பிரசாரத்தை துவக்கிவிட்டார். தி.மு.க.வில் தொகுதி பங்கீடு சுமூகமாக நடந்து முடிந்துவிட்டது.

இன்னும் தி.மு.க.வில் வேட்பாளர் பட்டியல் மட்டுமே வெளியிட வேண்டி உள்ளது. அதே சமயம் அதிமுகவில் கூட்டணி கட்சிகளிடையே ஆரம்பத்தில் இருந்தே கடும் சர்ச்சை நிலவி வந்தது. இதில் உச்சகட்டமாக தேமுதிக கோபித்து கொண்டு அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்துவிட்டது.அதேபோல சமக கட்சியை சேர்ந்த சரத்குமார், கருணாஸ், தமிமூன்அன்சாரி, தனியரசு உள்பட பலரும் அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்துவிட்டனர்.

இந்தநிலையில், அதிமுக சார்பில் முதல்கட்டமாக முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 6 பேர் கொண்ட முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. நேற்று முன்தினம் 171 பேர் கொண்ட அதிமுகவின் 2-வது பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள் உள்பட பலருக்கு சீட் மறுக்கப்பட்டது. மேலும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி உள்ளனர். சீட் தராததால் இவர்களின் அவர்களின் ஆதரவாளர்கள் சாலை மறியல், போராட்டம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. அதிமுகவினர் அதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை எழும்பூர் (தனி) தொகுதி கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தலைவர் ஜான்பாண்டியன் எழும்பூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுத்துள்ளதற்கு அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, எழும்பூரை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் நேற்று மாலை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு எழும்பூர் தொகுதியை ஒதுக்க கூடாது. இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளரையே நிறுத்த வேண்டும். தொகுதிக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லாதவர்களுக்கு சீட்டு ஒதுக்குவது தவறு என்றனர்.

பூந்தமல்லி (தனி) தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இங்கு முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். பா.ம.க.வுக்கு சீட் ஒதுக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் 100-க்கு மேற்பட்டோர் பூந்தமல்லி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து, நசரத்பேட்டை போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடனடியாக அதிமுகவினர் கலைந்து செல்லவில்லை. நீண்ட நேரத்துக்குபின் கலைந்து போனார்கள். இதனல், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளராக காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கஜா(எ) கஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், சிங்கபெருமாள் கோவில் அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செய்யூர் தொகுதி அதிமுக வேட்பாளராக, மதுராந்தகம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கணிதா சம்பத் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு அப்பகுதி அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் பிரவீன் குமாரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சித்தாமூர் கிழக்கு ஒன்றிய அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சித்தாமூர் மும்முனை சாலை பகுதியில் நேற்று 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், கனிதா சம்பத்தை மாற்றக்கோரி முன்னாள் எம்.எல்.ஏ. தனபாலின் ஆதரவாளர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர், செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பட்டினம், இசிஆர் சாலையில் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக எம்.பிரகாஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்த திருவள்ளூர் அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளரும், விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் மகளுமான சஞ்சனா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதேபோல, அதிமுக ஊராட்சி செயலாளர் கேசவன் தலைமையில் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் பெரியபாளையம் பஸ் நிலையம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி தொகுதியை அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என வாக்குவாதம் செய்தனர். ஒரு மணிநேரத்திற்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது. இதனால், சென்னை - திருப்பதி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பல்லாவரம்: செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக, செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பினால் பல்லாவரம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ தன்சிங் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

பல்லாவரம் தொகுதியில் ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிட்லப்பாக்கம் ராஜேந்திரனை மாற்றக்கோரியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங்கை வேட்பாளராக அறிவிக்கக் கோரியும், நேற்று அதிமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பல்லாவரம் பாண்ட்ஸ் சிக்னல் அருகே ஜிஎஸ்டி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.பி.மரகதம் குமரவேல் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் பெரும்பாக்கம் சி.விவேகானந்தன் என்பவரின் ஆதரவாளர்கள் மரகதம் குமரவேலுக்கு வழங்கிய சீட்டை ரத்து செய்துவிட்டு இதே பகுதியில் வசிக்கும் உள்ளூரை சேர்ந்த விவேகானந்தனுக்கு சீட் வழங்க வேண்டும் என இரு தினங்களாக வலியுறுத்தி வந்தனர்.

அவர்கள், நேற்று மாலை திடீரென பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகம் அருகே அய்யனார் கோயில் என்ற இடத்தில் ஒன்று கூடினர். பின்னர் அவர்கள், அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை மாற்றி விவேகானந்தனுகு சீட் வழங்க கோரி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தீக்குளிக்க முயற்சி: அதிமுக அமைச்சராக இருப்பவர் பாஸ்கரன். இவருக்கு சிவகங்கை தொகுதியில் இம்முறை சீட் வழங்கப்படவில்லை. மாவட்ட செயலாளர் செந்தில்நாதனுக்கு சீட் வழங்கப்பட்டது. இதனால், அமைச்சரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நேற்று காலை சிவகங்கை சிவன் கோயில் அருகே ஆதரவாளர்கள், உறவினர்கள் என ஆயிரக்கணக்கானோர் கூடினர். அமைச்சருக்கு சீட் மறுக்கப்பட்டதை கண்டித்தும், அதற்கு காரணமான செந்தில்நாதனை கண்டித்தும் கருப்புக்கொடியுடன் கோஷமிட்டனர்.

பின்னர் ஊர்வலமாக அரண்மனை வாசல் வரை வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாலமுருகன், சின்னமருது, சிவா ஆகியோர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அருகில் இருந்தவர்கள் தடுத்து, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனர்.

கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதியில் செந்தில்குமார் வேட்பாளராக அறிவிக்கப் பட்டார். இவரை மாற்ற கோரி கள்ளக்குறிச்சி நகர அதிமுக செயலாளர் பாபு தலைமையில் 300 பேர் ஊர்வமாக கட்சி அலுவலகத்தில் இருந்து சென்று கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் காலையில் கோஷமிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களில் நிர்வாகி வெங்கடேசன், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் தடுத்து நிறுத்தி நிறுத்தி வெங்கடேசன் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தொகுதிக்கு தர்மதங்கவேலு அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலங்குடி பேருந்து நிலையம் முன்பாக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.

முன்னாள் அமைச்சர்கள்: ராமநாதபுரம் தொகுதி சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ. டாக்டர் மணிகண்டன். முன்னாள் அமைச்சரான இவருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அவரது ஆதரவாளர்கள், ராமநாதபுரம் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதை கண்டித்தும், மீண்டும் அதிமுகவுக்கே ஒதுக்கி மணிகண்டனுக்கு சீட் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் நேற்று 2வது நாளாக ராமநாதபுரம் அரண்மனை முன்பு  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆனந்தனுக்கு சீட் வழங்கியதற்கு அதிமுகவிர் எதிர்ப்பு தெரிவித்து தற்போதைய அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜனுக்கே போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக பல்லடம் பேருந்து நிலையம் முன்பாக  300க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிட்டிங் எம்.எல்.ஏ. ராஜவர்மன்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜவர்மன். அவருக்கு இந்த தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. இவருக்கு பதிலாக அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து ராஜபாளையம் அருகே சத்திரபட்டியில் அதிமுக தொண்டர்கள் சுப்பையா துரை தலைமையில் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவில்லிபுத்தூர் சிட்டிங் எம்.எல்.ஏ. சந்திரபிரபாவுக்கு இம்முறை சீட் வழங்கப்படவில்லை. அவருக்குப் பதில், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் மான்ராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் சந்திரபிரபா முத்தையா உள்ளிட்ட அதிமுகவினர், வேட்பாளரை மாற்றக்கோரி திருவில்லிபுத்தூர் பஸ் நிலையம் அருகே இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மணிக்கூண்டு அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

கூட்டணி கட்சிக்கு எதிர்ப்பு: இதேபோல், அரியலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக, தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், திருப்பத்தூர் மாவட்டத்தில் குடியாத்தம் தொகுதி வேட்பாளராக பரிதா உள்ளிட்டோரை மாற்றக்கோரியும் சாலை மறியல் நடந்தது.

இதுதவிர, திருப்பத்தூர் மாவட்டம் கே.வி.குப்பம் (தனி), கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், தர்மபுர் மாவட்டம் பென்னாகரம் தொகுதிகளை பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிமுகவினரின் இந்த போராட்டங்களால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதி அடைந்தனர். ஈரோட்டில் பெருந்துறை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஜெயக்குமாரை மாற்றக்கோரி பெருந்துறையில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 பணம் வாங்கிக் கொண்டு பட்டியல்

அதிமுகவில் மூத்த தலைவர்கள், அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்குத்தான் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு கொடுக்கவில்லை என்றால் அவர்களை அமைச்சர்களே தோற்கடித்து விடுவார்கள் என்று தலைமை பீதியடைந்ததால் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதேநேரத்தில் அமைச்சர்களில் சிலரும், மூத்த தலைவர்கள் சிலரும் பணத்தை வாங்கிக் கொண்டு கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள், சமீபத்தில் கட்சிக்கு வந்தவர்கள் என்று பலருக்கும் வாரி வழங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. சில தலைவர்கள் தங்களுக்கு நெருக்கமான தோழிகளுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார்களாம். இதற்கான விளைவு தேர்தலில் எதிரொலிக்கும் என்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.

அதிமுக எம்.எல்.ஏ. சுயேட்சையாக போட்டி என அறிவிப்பு

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் (தனி) சட்டமன்ற தொகுதியில், அதிமுக வேட்பாளராக சந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ. சந்திரசேகரன், நேற்று கொல்லிமலையில் தனது ஆதரவாளர்கள் 300க்கும் மேற்பட்டோருடன், வல்வில் ஓரி அரங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, வேட்பாளரை உடனடியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்திய அவரது ஆதரவாளர்கள், திடீரென சந்திரசேகரன் வாழ்க, தங்கமணி ஒழிக என கோஷமிட்டனர். இதையடுத்து அங்கிருந்து ஊர்வலமாக ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு சென்றனர்.

அங்கு சந்திரசேகரன் எம்.எல்.ஏ., செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த தொகுதிக்கு அரசுக் கலைக் கல்லூரி, நீதிமன்றம், சாலை வசதி, மலைவாழ் மக்களுக்கு பட்டா, ஜாதிச் சான்றிதழ் என பல்வேறு திட்டங்களை பெற்று தந்துள்ளேன்.

ஆனால், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரன், கொல்லிமலை மக்களை சந்திப்பதை விட, அமைச்சர் தங்கமணியை சந்திப்பதை மட்டுமே வாடிக்கையாக வைத்திருப்பவர். அதுவும் மரம் கடத்தும் வேலை செய்யும் சந்திரனை, வேட்பாளராக அறிவித்துள்ளனர். எனவே, ஊடகம் வாயிலாக முதல்வரை நான் கேட்டுக் கொள்வது என்னவென்றால், மூன்று நாட்களுக்குள் வேட்பாளரை மாற்றி எனக்கு வாய்ப்பு வழங்காவிட்டால், சுயேட்சையாக போட்டியிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.

Top