logo
பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் காவல்துறை மரியாதையுடன் இன்று அடக்கம் ..

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் காவல்துறை மரியாதையுடன் இன்று அடக்கம் ..

26/Sep/2020 12:52:47

சென்னையில் நேற்று காலமான பாடகர் எஸ்.பி.பி.யின் உடல், அவரது பண்ணைத் தோட்டத்தில் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி., அதில் இருந்து மீண்ட நிலையில், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார். அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

எஸ்.பி.பி. உடல் இறுதிச் சடங்கிற்காக, திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கத்திற்கு இன்று எடுத்துச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது. ரசிகர்கள் அஞ்சலி செலுத்த திரண்டதால் கொரோனா தொற்று அபாயம் உள்ளதாகக் கருதி நேற்று மாலையே அவரது உடல் தாமரைப்பாக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்குள்ள பண்ணை வீட்டில் இன்று அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில், நடிகர் விஜய் நேரில் சென்று எஸ்பிபி-க்கு இறுதிமரியாதை செலுத்தினார்.

எஸ்.பி.பி. மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Top