logo
கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள முன்வரவேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள முன்வரவேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

16/Mar/2021 03:56:27

புதுக்கோட்டை, மார்ச்:  கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள முன்வரவேண்டும் என புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்களிடம் வேண்டுகோள்  விடுத்தார்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6  தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களான டாக்டர் சி. விஜயபாஸ்கர்(விராலி்மலை), வீ.ஆர்.கார்த்திக்தொண்டைமான்(புதுக்கோட்டை), பி.கே. வைரமுத்து(திருமயம்), தர்ம தங்கவேல்(ஆலங்குடி), ஜெயபாரதி(கந்தர்வகோட்டை) ஆகியோருக்கு ஆதரவு திரட்டும் வகையில்  முதலாவதாக  விராலிமலை தொகுதியில் வேட்பாளர் டாக்டர்.சி. விஜயபாஸ்கருக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை  தனது பிரசாரத்தை முதல்வர் தொடங்கினார்.


இதையடுத்து, புதுக்கோட்டை தொகுதி வேட்பாளர் வீ.ஆர், கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மேலும் பேசியதாவது: உங்களுக்கு சேவை செய்ய மீண்டும்   வாய்ப்பளிக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றப்பட்டுள்ளதை இங்குள்ள மக்கள் அனைவரும்  அறிவீர்கள். ஆனால்,  எதிர்க்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின்  தமிழக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று பொய்ப்பிரசாரம் செய்கிறார்.


ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நீங்கள் வைத்த மருத்துவக்கல்லூரி  தற்போது புதுக்கோட்டைக்கு கிடைத்திருக்கிறது. இது அதிமுக அரசின் சாதனையாகும். மேலும், பல்வேறு சாலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நூறாண்டு கால திட்டமான  காவிரி ஆற்றிலிருந்து  வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை  கதவணை கட்டி புதுக்கோட்டை மாவட்டத்துக்கு  திருப்பி விட வேண்டும் என்ற  கோரிக்கை நிறைவேற்றும் விதமாக ரூ.14,400 கோடியில் திட்டம் தீட்டி அத்திட்டத்தை நானே நேரில் வந்து அடிக்கல் நாட்டினேன். இதன் மூலம் உங்கள் பகுதி வளம் செழிக்கும் பகுதியாக மாறும்.


குடிமராமத்து திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் நிரம்பும் நிலையை உருவாக்கிய அருமையான திட்டம். ஆனால், எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின்  நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று பொய் பிரசாரம் செய்து வருகிறார்.


தேர்தல் அறிக்கையில்  ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர், மாதம்தோறும் ரூ.1500 உதவித்தொகை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகள், கேபிள் கட்டணம் இலவசம் போன்ற வாக்குறுதிகள்  ஆட்சிக்கு வந்தவுடன் நிச்சயமாக  நிறைவேற்றுவோம். உண்மையை பேசும் கட்சி அதிமுக. மக்களுக்கு சேவை செய்யும் கட்சியும் அதிமுகதான். ஏழை எளிய நடுத்தர மக்களின் முனனேற்றத்துக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக அரசுதான்.

தமிழகத்திலுள்ள 17,662 வருவாய் கிராமங்களுக்கு பாரத் நெட் நிறுவனம் மூலம் இணையதள வசதி அளிக்கும் திட்டம் அடுத்த வாரம் தொடங்கப்படும். 

எதிர்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின் ஊர் ஊராகச்சென்று மக்களிடம் மனுக்களை வாங்கி அதை பெட்டியில் போட்டு பூட்டி அந்தப்பெட்டியை தான் ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள்களுக்குள் தீர்வு காண்பதாகக்கூறுகிறார். இவர் துணை முதல்வராக இருந்த போது இதை ஏன் மக்களை சந்திக்கவில்லை. இது மக்களை ஏமாற்ற ஸ்டாலின் போடும் நாடகம் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.


2020 செப்டம்பரில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தபடி  உதவி மையம் 1100  என்ற எண்ணை அறிமுகப்படுத்தியது.  அதன் மூலம்ல பெறப்பட்ட  9.77 லட்சம்  மனுக்களில் 5.27 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.. எனவே இனிமேல் ஸ்டாலின் கொண்டு போன பெட்டியை அவர் திறக்கவே முடியாது. மனுக்களையும் இனிமேல் ஸ்டாலின் வாங்க மாட்டார்.



கொரோனாவைக்கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னணி மாநிலமாகத்திகழ்கிறது. அதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் பங்கு மகத்தானது.  இச்சூழலில், தற்போது கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருக்க பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும். அவசியம். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்றார் முதல்வர் பழனிசாமி.


Top