logo
விருப்பங்களை நிறைவேற்றும் திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர்..

விருப்பங்களை நிறைவேற்றும் திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர்..

25/Sep/2020 03:50:23

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து  48 கி.மீ. தொலைவில் திருப்புனவாசலில்  அருள்மிகு கச்சணி மாமுலை அம்மன் (பிரஹந் நாயகி) சமேத பழம்பதிநாதர் விருப்பங்களை நிறைவேற்றும்  விருத்தபுரீஸ்வரர் அருள்பாலித்து வருகிறார்.

   முத்தும், பவளமும் கொட்டிக் கிடக்கும் பாண்டிய நாட்டின் கடற்கரை அருகே அமைந்துள்ள இந்த திருப்புனவாயில் அதிஉன்னதத் தலமாக போற்றப்படுகின்றது . பாண்டிய நாட்டுத் திருத்தலங்களில் இரண்டாவது தலமாகப் புகழ் பரப்பும் இப்பதி, தேவாரத் தல வரிசையில் ஏழாவது இடமாகத்திகழ்கிறது திருப்புனவாசல் என்று அழைக்கப்படும் இத்தலம்.  மிகப்பழமை வாய்ந்த இத்தலத்தில் அனைத்திற்கும் மூல காரணமான சதாசிவ மூர்த்தியானவர் மகாலிங்கமாய் எழுந்து, பிரம்மா - விஷ்ணு - ருத்ரன் ஆகியோரைப் படைத்து, உடன் அவர்களுக்குண்டான தேவிகளையும் படைத்து, ஐந்தொழில்களைப் புரியுமாறு அவர்களுக்கு ஆணையிட்டு, அண்ட சராசரங்களின் சிருஷ்டி முழுவதையும் தன் கட்டளையின் கீழ் கொண்டு வந்து மீண்டும் இந்த மகாலிங்கத்துள் புகுந்து மறைந்தார்.

விருத்த (பழம்) பதி, விருத்தபுரி, விருத்த காசி, இந்திரபுரம், மகபதிபுரம், வச்சிரவனம், வனமுகம், புனவை, தட்சிண சிதம்பரம், கைவல்ய ஞானபுரம், நித்யானந்த நகர், புண்ணியநகர் போன்ற எண்ணற்ற பெயர்கள் கொண்ட அற்புதத் திருத்தலமிது.  இந்திர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சக்கர தீர்த்தம், சூரிய தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சந்திர தீர்த்தம், வருண(கடல்) தீர்த்தம், கல்யாண தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், பாம்பாறு ஆகிய பத்து தீர்த்தங்களைக் கொண்டது இந்த பழம்பதி!

 பாண்டிய மன்னர்களின் கொடைகளையும், நிவந்தங்களையும் பெற்ற இக்கோயில் எண்ணற்ற கல்வெட்டுகளை கொண்டுள்ளது.

கல்வெட்டில் இத்தல ஈசர் திருப்புனவாயிலுடைய நாயனார் என்றும், திருப்புனவாசலுடைய நாயனார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார். திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரர் இத்தலத்தின் மீது ஆளுக்கொரு பதிகம் பாடிப் போற்றியுள்ளனர்! ராமலிங்கரும் தனது திருவருட்பாவில் இப்பதியினைப் போற்றுகின்றார். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த சுசீலன் என்ற சிவபக்தன் ஒரு சமயம் தனது மனைவியோடு இப்பதிக்கு வந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, பழம்பதிநாதரை வணங்கி, சில தினங்கள் தங்கினான்! அப்போது பாம்பு கடித்து இருவரும் இறந்தனர்.

யமதூதர்கள் அங்கே வந்தபோது நந்தியம் பெருமான் அவர்களுடன் போரிட்டு வெற்றிபெற்று, அவர்களை சிவனார்முன் நிறுத்த, அவர்களுக்கு மோட்சம் அளித்தார் பரமன். யமதூதர்கள் யமனிடம் சென்று நடந்ததை தெரிவிக்க, பிழை செய்தோம் என யமன் தன் தந்தை சூரியனிடம் சென்று விமோசனம் கேட்க, விருத்தபுரி அடைந்து, வழிபடுமாறு கூறினார். அதன்படி, யமன் இங்கு வந்து தீர்த்தங்களில் நீராடி, ஈசனை பூஜிக்க, பரமேஸ்வரன் ரிஷபாரூடராய் காட்சி தந்து, ‘இத்தலத்திலுள்ளோர் உயிர் உடலைவிட்டு நீங்கும்போது, பத்து நாழிகைக்கு நீ அவ்வுயிரை அணுகக் கூடாது என இறைவன் ஆணையிட்டார்.

அதுபடியே நடப்பேன் எனப் பணிந்து யமலோகம் அடைந்தான் யமதர்மன். யமனைத் தொடர்ந்து, சூரியனும் இந்தத் தலம் அடைந்து, தீர்த்தம் உண்டாக்கி அதில் மூழ்கி, மகாதேவனை பூஜித்து, தான் உருவாக்கிய தீர்த்தத்தில் நீராடுவோர், இகபர சௌபாக்யம் பெற வேண்டும் என வேண்டிப் பெற்றான். தென்கோடியை சமன் செய்ய வந்த அகத்தியர் கிழக்கு கடற்கரையோரம் தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி, லிங்கம் பிடித்து, ஈசனை பூஜித்து, திருமணக் காட்சியைக் காட்டியருள வேண்டினார். அதன்படியே பழம்பதிநாதர் அங்கே திருக்கல்யாண காட்சியை அகத்தியருக்குக் காட்டியருளினார்.

இதனால் அவ்விடம் திருக்கல்யாணபுரமென்றும், தீர்த்தம் கல்யாண தீர்த்தமென்றும் ஆயின. பின், அகத்தியர் பழம்பதி அடைந்து, சர்வேஸ்வரனின் திருநடனக் காட்சியை வேண்டினார். பெருமானும் உகந்து, நடனம் புரிந்தருளினார். இதனால் இவ்விடம் ‘சிவஞானசபை என்று போற்றப் பெற்றது.  கிழக்கு முகமாக திகழும். ஐந்துநிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இதன் உயரம் 65 அடி ஆகும். இங்கே வல்லப கணபதியும், தண்டபாணி சுவாமியும் சிறந்து விளங்குகின்றனர். உள்ளே, நேராக கொடிமரம், பலிபீடம், நந்தியம்பெருமான்.

அடுத்ததாக சபா மண்டபம், மாக மண்டபம், இடைமண்டபம், கருவறை என நீண்ட கருங்கல் மண்டப வரிசை ஒரே பெரிய பிராகாரத்தைக் கொண்டுள்ளது. மகா மண்டபத்தின் தென் மூலையில் சோமாஸ்கந்தர் வீற்றிருக்கும் அறை. வடப்புறம் தென் முகமாக வீற்றருளும் நடராஜர்-சிவகாமி. உடன் ஏனைய உற்சவர் சிலா விக்ரகங்களும் உள்ளன. அதனெதிரே நால்வரும் உடன் சேக்கிழாரும் கற்சிற்பமாக உள்ளனர். மகாமண்டபத்தின் வலப்புறம் சிறுவாயில் உள்ளது. அடுத்துள்ள இடை மண்டபம் விசாலமானது. இடை மண்டபத்தில் நுழையும்போதே ஈசனின் பிரமாண்டத் திருமேனி நம்மை பிரமிக்க வைக்கிறது.

அளவில் பெரியதாகவும், அழகில் அரியதாகவும் அருள்புரியும் வள்ளலைக் கண்டு உள்ளம் குளிர்கிறோம். 33 அடி ஆவுடையர் மீது 9 அடி உயரமும். 8 1/2 அடி சுற்றும் கொண்ட சுயம்பு பாண லிங்கத்தின் அருட்காட்சி  பரவசமூட்டுகின்றது! பழம்பதிநாதர், விருத்தபுரீஸ்வரர், மகாலிங்கேஸ்வரர் என்றெல்லாம் அழைக்கப்படும் இவருக்கு அபிஷேகம் செய்ய லிங்கத்தின் இருபுறங்களிலும் உள்ள மரப்படிகள் மீதேற வேண்டும். தேவாதி தேவர்கள் பாபவிமோசனமும், அரிய வரங்களையும் பெற்றது, இந்த நாதனை பூசனைப் புரிந்ததாலேயே எனும்போது ஆனந்தம் பெருகுகின்றது.

அதியற்புதமான சிவ தரிசனம் முடித்து, வலம் வருகையில், தென் கிழக்கில் மதிலொட்டி மடப்பள்ளியும், அருகே தல விருட்சமான புன்னை மரமும் அமைந்துள்ளன. தென்புறமாக கொட்டகையின் கீழ் கபில புத்திரர்கள் ஒன்பது பேருடன் ஆதிசைவ சிவனடியார்கள் இருவரும் வீற்றுள்ளனர். அருகே சதுர்முக லிங்கமும், பஞ்ச கணபதிகளும் உள்ளனர். மேலே மகிழமரம் நிழலோடு, நறுமணத்தையும் பரப்புகிறது. பின்னர் கருவறையை ஒட்டி, கிழக்கு முகமாக சந்நதி கொண்டு எழுந்தருளுகின்றார் ஆகண்டல் கணபதி, இந்திரன் வணங்கிய இந்த விக்னேஸ்வரரை வலமாக வந்து, கோஷ்ட மாடங்களை கண்ணுறுகின்றோம்.

தென் கோஷ்ட மூர்த்தியான தட்சிணாமூர்த்தி வித்தியாச கோலத்தில் அமர்ந்துள்ளார். வலது மேல் கரத்தில் அட்ச மாலையும், இடது மேல் கரத்தில் நாகமும் கொண்டு, கீழ் வலக்கரம் சின்முத்திரை காட்டியும், இடக்கரம் தொடை மீது ஊன்றியும் வீற்றுள்ளார். அடுத்து, மேற்கு பிராகாரத்தில் குருந்த மரத்தடியில் பெரியாண்டவர் சந்நதி. இவரை குலதெய்வமாகக் கொண்டோர் எண்ணற்றவர்கள். திங்கட்கிழமைகளில் மட்டுமே இவருக்கு பூஜையும், நிவேதனமும். பின்னர் கந்தன் சந்நதியும், நான்கு லிங்கமும் ஒரு அம்பாளும் கொண்ட கொட்டகையும் அமையப் பெற்றுள்ளது.

அடுத்ததாக அம்பாள் சந்நதி. இந்தச் சந்நதிக்கு முன்னால் வாயில் உண்டு. அதன் கதவுகள் குடைவரைக் காளியின் பொருட்டு, எப்போதும் மூடியே இருக்கும். நந்தி இங்கு வாகனமாய் உள்ளது. வெளிப்புற மண்டபம் பல தூண்களை கொண்டுள்ளது! கருவறையுள் கருணாகடாட்சியாய் அருட்கருணைப் புரிகின்றாள், ஸ்ரீ பரங்கருணை நாயகி! புன்னகை சிந்தியபடி பொலிவுறத் திகழும் இந்த அன்னையை பெரியநாயகி என்றும், பிரஹன்நாயகி என்றும் அழைப்பார்கள்.  கச்சனிமுலையம்மை’ என கல்வெட்டில் இவளது திருநாமம் பொறிக்கப்பட்டுள்ளது.

அம்பாளது எழில் தரிசனம் முடித்து, முகப்பு வாயிலை அடைகிறோம். அங்கே ஸ்ரீகுடைவரை காளி திரிசூல வடிவில் தரிசனமளிக்கின்றாள்! வாயிலின் உள்ளே தென்புறமுள்ள திண்ணை மீது கருணாகடாக்ஷிக்கின்றாள்! இவளது முழு தரிசனத்தை ஏதிரே வைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் பிம்பமாக நாம் தரிசித்து இன்புறலாம்! பலரது கோரிக்கைகளை நிறைவேற்றிடும் இந்த அன்னை மிகுந்த வரப்பிரசாதியாவாள். தான் வைத்த கோரிக்கைகள் நிறைவேறியதும் திரிசூலம் நட்டு காணிக்கை செலுத்துகின்றனர், பக்தர்கள்.

கொன்றை மற்றும் ஊமத்தம் மலர்களால் இத்தல பெருமானைப் பூஜித்து பெரும் பலன்களைப் பெறலாம் என்பது திருஞானசமபந்தர் திருவாக்காகும். இந்த இறைவனையும் இறைவியையும் வழிபட்டால், தீராத நோய்கள் நீங்கும்; தேவைப்படும் உத்தியோக மாறுதல், பதவி உயர்வு கிட்டும். குடவரைக் காளியை வழிபட்டால் குழந்தைப் பேறும், தடைபட்ட திருமணம் நடந்தேறுவதும் கண்கூடு. சுற்று வட்டாரத்திலுள்ள 100-க்கும் மேல்பட்ட கிராமங்களில்  வசித்துவரும் பெண்களுக்குக் குழந்தை பிறந்ததும் இங்கு தூக்கி வந்து குடவரைக் காளிக்கு பூஜை செய்துவிட்டுப் போகின்றனர். இந்துக்கள் மட்டுமல்லாது ஏனைய மதங்களைச் சேர்ந்த பெண்களும் ஒன்பதாவது மாதம் (வளைகாப்பின் போது) இரண்டு வளையலை எடுத்துத் தனியாக வைத்து, சுகப் பிரசவம் நடக்க வேண்டுமென குடவரைக் காளியிடம் பிரார்த்தித்துக் கொள்கிறார்கள். அவ்வாறே சுகப்பிரசவம் நிகழ்ந்ததும், அந்த இரு வளையல்களை எடுத்து வந்து காளிக்கு  சமர்ப்பித்து, பூஜை செய்து வழிபட்டுச் செல்கின்றனர்    என்றார் இந்த ஆலயஅர்ச்சகர் விபு குருக்கள்(94438 49128). புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் ஆவுடையார் கோவிலில் இருந்து இங்கு சென்று வர பேருந்துகள்  உள்ளன. (படங்கள் உதவி- டீலக்ஸ் ஞானசேகரன்-புதுக்கோட்டை-98424 24961).



Top