logo
ஈரோட்டில் 30 ஆயிரம் விசைத்தறி கூடங்களில் ரயான் உற்பத்தி 2 - வது நாளாக நிறுத்தம்: ரூ.82 கோடி வர்த்தகம் முடக்கம்

ஈரோட்டில் 30 ஆயிரம் விசைத்தறி கூடங்களில் ரயான் உற்பத்தி 2 - வது நாளாக நிறுத்தம்: ரூ.82 கோடி வர்த்தகம் முடக்கம்

12/Feb/2021 07:54:24


 ஈரோடு, பிப்:  ஈரோடு, அசோகபுரம், மாணிக்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சூளை, சூரம்பட்டி, சித்தோடு, லக்காபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் செயல்பட்டு வரும் விசைத்தறிகளில் 30,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. உற்பத்தி செய்யப்படும் ரயான் ரகம் குஜராத், மகாராஷ்டிரா போன்ற வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

 இந்நிலையில் சமீபகாலமாக ரயான் நூல் விலை உயர்ந்த அளவுக்கு ரயான் துணி ரகம் உயரவில்லை. தீபாவளியன்று ஒரு கிலோ ரயான நூலின் விலை ரூ.150 க்கு விற்பனையானது. அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி கிலோ ரூ.168-க்கு விற்பனையானது. டிசம்பர் 25-ஆம் தேதி கிலோ ரூ.230 ஆக அதிகரித்து விற்பனையானது.

இதனால் ரயான் ரகம் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகின்றது. இதையடுத்து ரயான் ரக உற்பத்தியை 11 நாட்களுக்கு நிறுத்தி வைப்பது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு விசைத்தறியாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.


 இதையடுத்து வெள்ளிக்கிழமை   முதல் வரும் 21-ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு ரயான் ரகம் மட்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன்படி ஈரோடு பகுதியில் உள்ள 30,000 விசைத்தறியில் நாள் ஒன்றுக்கு சுமார் 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி பாதிக் கப்படும் என்றும், இதன் மூலம் தினமும்  ரூ.7.50 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்படும் என்று விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கிட்டத்தட்ட ரூ. 82 கோடி மதிப்பிலான வர்த்தக முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மற்ற ரகங்கள் தயாரிப்பு பணிகள் வழக்கம் போல நடைபெற்று வருவதாக விசைத்தறியாளர் கள் தெரிவித்துள்ளனர்.மூலப் பொருளான பஞ்சு விலை உயரும்போது மட்டுமே நூல் விலையை உயர்த்திக் கொள்ள வேண்டும். அல்லது மாதம் ஒருமுறை நூல் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என விசைத்தறியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Top