25/Sep/2020 08:37:55
ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. மாவட்டத்தின் மொத்த மதிப்பில் 60 சதவீதம் பேர் ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்தவர்கள்தான். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நாளொன்றுக்கு 2000 கொரோனா
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மாநகர் பகுதியில் மட்டும் தினமும் 500 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகர் பகுதிகளில் காந்திஜி ரோட்டில் உள்ள மகப்பேறு மருத்துவமனை,அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், பெரியசேமூர் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்.சூரம்பட்டிவலசில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், கருங்கல்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் என 5 இடங்களில் நிரந்தர கொரோனா
பரிசோதனை மையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா
பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது . இதுதவிர ஈரோடு அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சி மண்டபத்தில் ஸ்கிரீனிங் மையம் செயல்பட்டு வருகிறது. மாநகர் பகுதியில் வைரசால் பாதித்தவர்கள் இங்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு ஐந்து வகையான பரிசோதனைகள் செய்யப்பட்டு நோயின் தன்மை கண்டறியப்பட்டு அதற்கு தகுந்தார்போல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அறிகுறி இல்லாமல் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருவர் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு அரசு பல்வேறு வழிமுறைகளை வகுத்து உள்ளன. அதன்படி வைரஸ் குறித்தநம்பருக்கு என்று தனி அறை மற்றும் தனி கழிப்பறை வசதி இருந்தால் அவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு வீடுகளில் சிகிச்சை பெறுபவர்களை அந்தந்த ஏரியா நர்சுகள் தினமும் சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் சுகாதார பணியாளர்கள் தொலைபேசிகள் மூலம் தொடர்பு கொண்டு அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறும்போது, ஈரோடு மாநகர் பகுதியில் அறிகுறி இல்லாமல் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் இதுவரை 300 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை அந்தந்த ஏரியாவுக்கு என்று நியமிக்கப்பட்டுள்ள நர்சுகள் தினமும் சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் சுகாதார பணியாளர்கள் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் உடல்நிலை குறித்து கேட்டு வருகின்றனர். அரசு அறிவித்துள்ள வழிமுறைப்படி வீடுகள்,தனி அறைகள் கழிப்பறை வசதி இருந்தால்தான் அந்த நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுடைய நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.