logo
தமிழர்களின் தொண்மையான கலை, பண்பாடுகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

தமிழர்களின் தொண்மையான கலை, பண்பாடுகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

08/Feb/2021 06:14:40

புதுக்கோட்டை, பிப்: தமிழர்களின் தொண்மையான கலை, பண்பாடுகளை அடுத்த தலைமுறையினருக்கு  கொண்டு சேர்க்க வேண்டியது நம் அனைவரின் கடமை என்றார் கலை பண்பாட்டுத்துறை ஆணையர்  வ.கலைஅரசி 

 தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம் சார்பில் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நாடக விழா மற்றும் புதுக்கோட்டை மாவட்டக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா புதுக்கோட்டையில் உள்ள முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தில் கலை பண்பாட்டுத்துறை ஆணையர்  வ.கலைஅரசி தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.வே.சரவணன்  முன்னிலையில் (6.2.2021) நடைபெற்றது. 

 இந்நிகழ்ச்சியில் கலை பண்பாட்டுத்துறை ஆணையர் கலையரசி கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களுக்கு விருது வழங்கிப்  பேசியதாவது:

  நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நாளினை அரசு விழாவாகக் கொண்டடவும், அவரது நாடகங்களை இரண்டு இடங்களிலும் நடத்த அரசு ஆணையிட்டு ள்ளது. இந்த நிகழ்வின் முதல் நாடகம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. சுவாமிகளின் பவளக்கொடி நாடகத்தினை புதுக்கோட்டை நாடக நடிகர்கள் நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியுடன் பல்வேறு கிராமிய கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டன. 

 மாவட்டக்கலைமன்றம் மூலம் கலைத்துறையில் சாதனைப்படைத்த கலைஞர்களுக்கு மாவட்ட அளவில் வழங்கப்படும் கலைமுதுமணி விருது சதிர் கலைஞர் விராலிமலை முத்துக்கண்ணம்மாளுக்கும், கலை நன்மணி விருது கிராமிய தவில் கலைஞர் கோலேந்திரம் ராஜேந்திரனுக்கும், கலைச்சுடர்மணி விருது கொத்தமங்கலத்தை சேர்ந்த சிற்பி சு.திருநாவுக்கரசுக்கும், கலைவளர்மணி விருது கிராமிய இசைக்கலைஞர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமிக்கும், கலை இளமணி விருது ஓவியப்பிரிவில் கி.நா.கல்கிச் செல்வன் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுடன் சேர்ந்து நமது கலையும் மிகவும் தொன்மையானது. இந்த பண்பாடு மற்றும் கலாச்சாரத்தையும் நாம் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு  கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு நமது கலைஞர்கள் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும். அதற்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதை போலவே நமது மண்ணில் சாதனைகள் படைத்துஇன்றளவும் நம் எண்ணங்களில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மேதைகளை நினைவு கூர்ந்து அவர்களின் நினைவினைப் போற்றும் விழாக்கள் நடத்துவதும் மிகவும் அவசியமானதாகும்.

    அந்த வகையில் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்  நாடக விழா நடத்திட சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, இவ்வாண்டு இரண்டு இடங்களில் நடத்திட நிதி ஒதுக்கீடு ரூ.2 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் முதல் விழா நான் ஆட்சியராக பணியாற்றிய புதுக்கோட்டை மண்ணில் நடைபெறுவதிலும், அவ்விழாவிற்கு தலைமை வகித்து நடத்துவதில் பெருமை அடைகிறேன். அடுத்த விழா  தமிழ் சுவாமிகள் பிறந்த தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காட்டுநாயக்கன் பட்டியில் இம்மாதத்தில் நடத்தப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட இசைப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.1.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டடம் கட்டப்பட்டு வருகிறது என்றார்  தமிழகக் கலை பண்பாட்டுத்துறை ஆணையர் வ.கலைஅரசி.

 இதில், கலைபண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் பா.ஹேமநாதன், சங்கத் தலைவர் கலைமாமணி, எஸ்.எம்.இசையரசன், செயலாளர் எம்.பி.சுப்பிரமணியம், புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Top