03/Feb/2021 05:16:08
ஈரோடு, பிப்: இந்தியாவில் கொரோனாவுக்கான தடுப்பூசி முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவமனை, பவானி, கோபி அரசு மருத்துவமனை சிறுவலூர் ஆரம்ப சுகாதார மையம் ஆகிய 5 மையங்களில் கடந்த 16 -ஆம் தேதி முதல் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
முதல் மூன்று நாட்களுக்கு நூற்றுக்கும் கீழ் உள்ள நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது வரை அரசு, தனியார் மருத்துவம னைகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
இந்நிலையில், புதன்கிழமை முதல் பிறதுறை முன் களப்பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்கட்டமாக மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா கொரோனா (கோவிஷீல்டு) தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து இன்று முதல் பிற துறை முன் களபணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. வருவாய் துறையினர், காவல்துறையினருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்பட 5 இடங்களில் கொரோனா தடுப்பு ஊசி முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 13,800 கோவிஷீல்டு டோஸ்கள் வந்துள்ளது.
மாவட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி முதல் முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு போடப்பட்டுள்ளது. முதலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை குறைந்து இருந்தது. தற்போது அது பற்றிய அச்சம் விலகி உள்ளதால் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்.
தற்போது முதற்கட்டமாக அரசு, தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. புதன்கிழமை போலீசார் உள்பட பிறர் துறையைச் சேர்ந்த முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் சுதா, லோட்டஸ் ஆகிய 2 தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்றார் அவர்.