logo
மொழி அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கு செய்தித்தாள்கள்தான் உதவுகின்றன: வாசகர் பேரவை ஆலோசனைக்குழு உறுப்பினர் எஸ். ஆரோக்கியசாமி.

மொழி அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கு செய்தித்தாள்கள்தான் உதவுகின்றன: வாசகர் பேரவை ஆலோசனைக்குழு உறுப்பினர் எஸ். ஆரோக்கியசாமி.

29/Jan/2021 09:15:14

புதுக்கோட்டை, ஜன: மொழி அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கு தினமும் வாசிக்கும் செய்தித்தாள்கள்தான் உதவுகின்றன என்றார் புதுக்கோட்டை வாசகர் பேரவையின் ஆலோசனைக்குழு உறுப்பினர் எஸ். ஆரோக்கியசாமி.

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறை மற்றும் வாசகர் பேரவை, புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை இணைந்து வெள்ளிக்கிழமை நடத்திய இந்திய பத்திரிகைகள் தின விழாவில் அவர் மேலும் பேசியது:

மொழி அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கு தினமும் வாசிக்கும் செய்தித்தாள்கள் உதவுகின்றன. புதுக்கோட்டை மண்ணுக்கு எத்தனைப் பெருமைகள் உள்ளன தெரியுமா. நாட்டின் முதல் மருத்துவம் படித்த பெண் முத்துலட்சுமி அம்மையார் புதுக்கோட்டையில் பிறந்தவர். நம்முடைய வரலாற்றையும் தகவல்களையும் தெரிந்து கொள்வதற்கு பத்திரிகை வாசிப்பு பெரிதும் உதவும் என்றார் ஆரோக்கியசாமி.

பேரவையின் செயலர் பேராசிரியர் சா. விஸ்வநாதன் பேசியது: அதேபோல, சிவில் சர்வீஸ் தேர்வுகள் மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் தேர்வுகள் அனைத்துக்கும் நாளிதழ் வாசிப்பு கைகொடுக்கும்.போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகளில் 30 சதவிகிதம் கேள்விகளை தொடர்ச்சியாக நாளிதழ் வாசிப்பின் மூலம் நாம் பதிலளிக்க முடியும். மாணவ, மாணவிகள் தினமும் நாளிதழ் வாசிப்பை மேற்கொண்டால் பிற்காலத்தில் பெரிய அளவில் உதவும் என்றார் விஸ்வநாதன்.

விழாவுக்கு, கல்லூரி முதல்வர் பா. புவனேஸ்வரி தலைமை வகித்தார். கல்வியாளர் துரை. மதிவாணன் வாழ்த்திப் பேசினார்.

முன்னதாக தமிழ்த் துறைத் தலைவர் மா. சாந்தி வரவேற்றார். முடிவில் உதவிப் பேராசிரியை க. யோகாம்பாள் நன்றி கூறினார்.

புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் செய்தித்தாள் விநியோகிக்கும் களப்பணியாளர் களுக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை புதிய பேருந்து நிலையம், பிருந்தாவனம் போன்ற பகுதிகளுக்கு நேரில் சென்று பேரவையின் செயலர் சா. விஸ்வநாதன், இயற்கை விவசாயி சா. மூர்த்தி ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

Top