logo
தேர்தல் போர்களத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள்  எதிரிகளை ஓட  ஓட விரட்ட வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தேர்தல் போர்களத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் எதிரிகளை ஓட ஓட விரட்ட வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

07/Jan/2021 10:39:46

ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற  இளம் பெண்கள் இளைஞர் பாசறை கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது: கொரோனா காலகட்டத்தில் நமது அரசு எடுத்த சரியான நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.

கொரோனா காலகட்டத்தில் அதிக முதலீட்டை ஈர்த்த முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பெண்கள் கல்விக்கு இந்த அரசு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.ஏழை மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் அவர்களுக்கு கல்வியை வழங்கி வருகிறோம்.


ஏப்ரல் மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. நம்முடைய இளைஞர்கள் இளம் பெண்கள் பட்டாளம் திறமை வாய்ந்தவர்கள். ஜெயலலிதா சட்டப்பேரவையில் எனது மறைவுக்குப் பின்னால் நூறு ஆண்டுகள் அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் என்றார். அதை நிரூபிக்கும் வகையில் நீங்கள் (பெண்கள்)  தேர்தலில் முழு வீச்சில் ஈடுபட்டு அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும். அம்மா மறைவுக்குப் பின் நடைபெறும் முதல் பொதுத்தேர்தல் இது. எனவே நீங்கள் தேர்தல் போர்க்களத்தில் சிப்பாய்களாக இருந்து எதிரிகளை ஓட ஓட விரட்ட வேண்டும். 

பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை இந்த அரசு செய்துள்ளது. எனக்கு பெண்களுக்கு தாலிக்கு தங்கம், உதவித்தொகை, உனக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 80,000 கோடி மதிப்பில் கடன்கள் வழங்கி உள்ளோம். பெண்கள் முன்னேற்றத்துக்காக இந்த அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது . 

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு தந்த அரசு நமது அரசு தான். எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற நீங்கள் பாடுபட வேண்டும் என்றார் முதல்வர் பழனிசாமி.

கூட்டத்தில், அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், தங்கமணி மாநில வர்த்தக அணி செயலாளர் சுந்தர் ரவிச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Top