logo
எதிர்கட்சிகளையும் மதிக்கின்ற அரசாக  திமுக அரசு செயல்படுகிறது: சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி பேச்சு

எதிர்கட்சிகளையும் மதிக்கின்ற அரசாக திமுக அரசு செயல்படுகிறது: சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி பேச்சு

26/Jun/2021 10:58:48

புதுக்கோட்டை, ஜூன்: கடந்த காலங்களை போல் இல்லாமல் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் மதிக்கின்ற அரசாக திமுக  அரசு செயல்படுகிறது என்றார் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி 

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் முதல்நிலை பேரூராட்சியில் மாவட் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில்  (26.6.2021) சனிக்கிழமை நடைபெற்ற  அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டப்பயனாளிகளுக்கு அரசு மானியத் தொகை வழங்கிய சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி மேலும் பேசியதாவது:

பொதுமக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில்  அபிமளம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிக்கான அரசு மானியத் தொகை ரூ.15.38 லட்சம்  29 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அரிமளம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 252 வீடுகளில் 117 வீடுகள் கட்டும் பணி ஏற்கெனவே முடிக்கப்பட்டு, அதற்கான மானியத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 135 வீடுகள் கட்டும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் அரசு பங்களிப்பாக ரூ.2.10 லட்சம் வழங்கப்படுவதுடன், பயனாளிகள் பங்களிப்பு ரூ.43,000 ஆகும்மேலும் தேவையான நபர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வீடு வழங்கவும், அரிமளம் பேரூராட்சியில் உள்ள பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவும் தேவையான நடவடிக்கைக எடுக்கப்படும்.


மக்கள் நலப் பணிகளை முதலமைச்சர்  விரைவாக செயல்படுத்துவதை போல புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு அலுவலர்கள் மூலம் பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு தேவையான திட்டங்களை  கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதேபோன்று கடந்த காலங்களை போன்று அல்லாமல் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் மதிக்கின்ற அரசாகவும் அவர்களுடைய கருத்துகள் மக்களுக்கு நலன் பயக்கக் கூடியதாக இருப்பின் அவற்றையும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மக்களுக்கான அரசை  முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருகிறார் . இதற்கு தற்பொழுது மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரசு நிகழ்ச்சிகளே எடுத்துக்காட்டு.

தமிழகத்தில் உள்ள அனைத்துதரப்பு மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதுடன், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் நலத்திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உயர்த்த முதல்வர் பாடுபட்டு வருகிறார் என்றார் அமைச்சர் எஸ். ரகுபதி.

இதனை தொடர்ந்து  அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கஜா புயலின் போது சேதமடைந்து சீரமைக்கப்பட்ட  தமிழ் வாழ்க என்று ஒளிரும் பெயர்ப் பலகையினை அமைச்சர்  திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, அரிமளம் ஒன்றிய குழுத் தலைவர் மேகலாமுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் விஜயன், உதவி பொறியாளர் ரவிக்குமார் மற்றும் ராமலிங்கம், நாசர் () செந்தில்குமார் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Top